/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பூங்காவில் மரங்கள்: குழந்தைகள் குதுாகலிக்க பசுமை
/
பூங்காவில் மரங்கள்: குழந்தைகள் குதுாகலிக்க பசுமை
ADDED : மார் 10, 2025 04:35 AM

சிவகாசி: இன்றைய நவீன காலத்தில் நாம் இயற்கையோடு ஒன்றிணையாமல் செயற்கையோடு பின்னிப்பிணைந்து வாழ்கின்றோம். இயற்கையை பாதுகாத்து அதை நாம் அடுத்த சந்ததியினரிடம் கையளிக்க வேண்டியது ஒவ்வொருத்தருக்கும் தலையாயக் கடமை. செயற்கை அதிகம் மிகுந்த இவ்வுலகில் மனிதன் தனது மன நிம்மதியை திரும்பப் பெறுவதற்காக இயற்கையை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றான்.
இயற்கை சூழலில் வாழ்ந்த காலம் போய் இன்று இயற்கைக்கான சுற்றுலா செல்லும் நிலைமையை மனிதன் எதிர்நோக்கி உள்ளான். இயற்கை அன்னையை நாம் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பது முக்கியமான கடமை. பசுமையைப் பேண மரக்கன்றுகள் நட வேண்டும். மரங்கள் தான் மனித சமுதாயத்திற்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன. வானத்தை வசப்படுத்தி மழையை மண்ணுக்கு வருவிப்பதற்காக, இயற்கை நீட்டும் கரங்களே மரங்கள். இத்தகு மரங்களை வெட்டுவது இயற்கையின் கரங்களை வெட்டி முடமாக்குவதற்குச் சமம். மரங்களைப் பாதுகாப்பது என்பது இயற்கையின் கரங்களுக்கு கரம் கொடுப்பதை போல.
ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றுள் ஒவ்வொன்றையும் காசு கொடுத்து வாங்கும் நிலை ஏற்படுவது என்பது மனிதகுல வீழ்ச்சிக்கான அறிகுறி. முன்பு, ஐம்பூதத்துள் ஒன்றாக விளங்கும் நிலம் விற்பனைக்கு வந்தது. பின், நீர் விற்பனைக்கு வந்தது. அடுத்து மூச்சுக் காற்றையும் காசு கொடுத்து வாங்கவேண்டிய சூழல் வந்துகொண்டிருக்கிறது.
மனித குலத்தைக் காக்க, நிலம், நீர் காற்று போன்றவற்றை முறையே பேணவேண்டும். அதற்கு மரவளா்ப்பே சிறந்த வழி. புதிதாக மரக் கன்றுகளை நட்டு வளர்ப்பதோடு இருக்கின்ற மரங்களை பாதுகாப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
அந்த வகையில் சிவகாசி ஜெ. நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. பூங்காவிற்கு உரிய இலக்கணத்தோடு இங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் மட்டுமின்றி இயற்கையை ரசிப்பதற்கு ஏதுவாக மரங்களும் உள்ளது. இந்தப் பூங்காவில் சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் தங்களது பொழுதினையும் அழகாக கழிக்கின்றனர். விடுமுறை நாட்கள் மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் காலை, மாலையில் ஜெ. நகர் குடியிருப்புவாசிகள் பூங்காவினை ரசிப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கையோடு வாழ்கின்றனர். இதற்காக இப்பகுதி குடியிருப்புவாசிகள் மாநகராட்சியோடு சேர்ந்து மரங்களை பராமரிக்கின்றனர். தவிர குடியிருப்பு பகுதிகளிலும் ஏராளமான மரங்களை பராமரிக்கின்றனர்.
சங்கரன், குடியிருப்பு வாசி: பூங்காவில் உள்ள மரங்களை மாநகராட்சியோடு சேர்ந்து நாங்களும் பராமரிக்கின்றோம். பூங்காவின் ரம்யமான தோற்றம் மனதினை பரவசப்படுத்துகின்றது. இங்கு வந்து சிறிது நேரம் அமர்ந்தாலும் மனம் அமைதி கொள்கிறது. மேலும் இப்பகுதியில் வெப்பம் தாக்குதலும் குறைவாகவே உள்ளது. நடைப்பயிற்சி மேற்கொள்ள சிறந்த சூழல் உள்ளது.
சுப்பையா, குடியிருப்புவாசி: பசுமை என்பது இயற்கையின் அற்புதம். பச்சை பசேல் என்ற நிறம் கண்ணுக்கு மட்டுமல்ல மனதிற்கும் ஆனந்தமே. இன்றைய நவீன யுகத்தில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகின்றது. இதனை தவிர்ப்பதற்கு மரங்கள் அவசியம். உலக வெப்பமயமாதலை தடுக்கவும் மழைப்பொழிவை அதிகரிக்கவும் காரணமாக இருக்கும் மரங்களை வளர்ப்பது அவசியம். இதனை கருத்தில் கொண்டு பூங்காவில் மட்டுமல்லாது குடியிருப்பு பகுதிகளிலும் மரங்கள் வளர்க்கப்படுகின்றது.