/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சோழபுரம் ரயில்வே ஸ்டேஷன் மீண்டும் அமையுமா
/
சோழபுரம் ரயில்வே ஸ்டேஷன் மீண்டும் அமையுமா
ADDED : மே 25, 2024 04:53 AM
ராஜபாளையம்,: வளர்ந்து வரும் ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் அருகே ஏற்கனவே நடைமுறையில் இருந்து கைவிடப்பட்ட சோழபுரம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் அமைத்து தெற்கு ரயில்வேயின் கிராசிங் இல்லாத ரயில் வழித்தட பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
ராஜபாளையம் அருகே 12 கிலோமீட்டர் தொலைவில் சோழபுரம் கிராமம் அதன் அருகே ரயில்வே ஸ்டேஷன் செயல்பாட்டில் இருந்தது. மீட்டர் கேஜ் இருந்து வந்த1998- -99 வரை இயக்கத்தில் இருந்த இந்த ரயில்வே ஸ்டேஷன் பராமரிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களால் அதே காலகட்டத்தில் கைவிடப்பட்டது.
அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டபோது சோழபுரம் ரயில் நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் சுற்று வட்டார கிராம மக்கள் ரயில் இணைப்பு கிடைக்காமல் ராஜபாளையம், சங்கரன் கோவில் சென்று பயணித்து வருகின்றனர்.
இத்துடன் ரயில்வே நிர்வாகத்திற்கு ரயில்களை இயக்குவதற்கு சிக்கலாக ராஜபாளையம்- - சங்கரன்கோவில் இடையே 33 கி.மீ., நீளத்திற்கு கிராசிங் வசதி இல்லாததால் ரயில் தாமதம் மற்றும் கூடுதல் ரயில்கள் இயக்குவதில் பிரச்சனை நிலவி வருகிறது.
தற்போதைய ரயில் போக்குவரத்தால் சில ரயில்கள் ராஜபாளையம் அல்லது சங்கரன்கோயில் ரயில் நிலையத்தில் வழி விடுவதற்காக அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. அத்துடன் ரயில்களின் தாமதத்தால் தொலைதுார ரயில்களின் இயக்க சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.
தற்போது ராஜபாளையம் நகரம் வேகமாக வளர்ந்து வருவதுடன் அருகில் உள்ள சோழபுரம் கிராமத்தை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடியிருப்புகள் அதிகரித்து தொழிற்சாலைகளும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. எனவே இதன் அருகிலேயே ஒரு ரயில் நிலையம் அமைக்க வேண்டியது அவசியம்.
இது குறித்து சோழபுரம் ரயில் பயணிகள் சங்கம், ராஜபாளையம் வர்த்தக சங்கம், சோழபுரம் முறம்பு பகுதி வர்த்தகர்கள், அரசியல் கட்சியினர், சுற்றுப்பகுதி கிராம நிர்வாகிகள் தொடர்ச்சியாக ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
தீர்வு
ராஜபாளையம் அருகே இடவசதி பாதுகாப்புடன் கூடிய பகுதியான சோழபுரம் ரயில் நிலையத்தை மீண்டும் அமைக்க வேண்டும். ஏற்கனவே நான்கு வழிச்சாலை இதன் அருகிலும், ராஜபாளையம் திருநெல்வேலி நெடுஞ்சாலை அருகாமையில் செல்வதால் சுற்று வட்டார 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவர். கிராசிங் வசதி ஏற்படுத்தினால் ரயில்களின் தாமதத்திற்கும் தீர்வாக அமையும்.

