கொள்முதல் நிலையங்களில் 30 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம்
கொள்முதல் நிலையங்களில் 30 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம்
ADDED : பிப் 18, 2025 04:44 AM

சேத்துார்: தேவதானத்தில் லாரி உரிமையாளர்களிடையே கூலி பிரச்னையால் கொள்முதல் நிலையங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூடைகள் தேங்கியுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் அடுத்த தேவதானம், கோவிலுார் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய சாஸ்தா கோயில் நீர் தேக்க பாசன பகுதிகளில் நெல் விவசாயம் அதிகம். இங்கு அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவதானம், கோவிலுார், சேத்துார், முகவூர் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கின்றனர்.
இந்நிலையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள் லாரி உரிமையாளர்கள், அரசு இடையே நிலவும் கூலி பிரச்சனையால் மூன்று வாரங்களாக 30 ஆயிரம் மூடைகள் வரை தேங்கி உள்ளது. இதனால் நெல் விவசாயிகள் அறுவடை பணிகளை நிறுத்தி வைத்துள்ளதுடன், நெல்லுக்கான பணம் வங்கி கணக்கில் வந்து சேராமல் சிக்கலில் தவித்து வருகின்றனர்.
இத்துடன் 20 நாட்களுக்கும் மேல் நெல் மூடைகள் மண் தரையில் அடுக்கப்பட்டு கரையான் அரித்தும், எடை குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அரசுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கூலி பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே விவசாயிகள் எதிர்பார்ப்பு.
