/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரி மலையடிவாரத்தில் 8 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
/
சதுரகிரி மலையடிவாரத்தில் 8 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
சதுரகிரி மலையடிவாரத்தில் 8 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
சதுரகிரி மலையடிவாரத்தில் 8 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
ADDED : ஜூலை 19, 2025 01:07 AM

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலையடிவாரப் பகுதியில் பல ஆண்டுகளாக ஆக்கிமிரப்பு செய்யப்பட்டிருந்த 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 ஏக்கர் அரசு நிலத்தை நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் மீட்டனர்.
சதுரகிரி மலையடிவாரப் பகுதியான தாணிப்பாறை பகுதியில் பல ஏக்கர் அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் கடந்த காலங்களில் பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதனை அகற்றி சதுரகிரிக்கு வரும் மக்களுக்கு தேவையான பஸ் ஸ்டாண்ட், வாகன பார்க்கிங், சுகாதார வளாகம் உட்பட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரி வந்தனர்.
இந்நிலையில் கடந்த காலத்தில் 6 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்தது. இப்பகுதியில் மேலும் 8 ஏக்கர் நிலங்கள் மீட்கப்படாமல் இருந்தது.
நேற்று முன்தினம் கலெக்டர் சுகபுத்ரா தலைமையிலான அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் ஆய்வின் போது, மேலும் 8 ஏக்கர் அரசு நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வருவதை அறிந்த கலெக்டர் உடனடியாக அதனை அப்புறப்படுத்தி நிலத்தை மீட்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து நேற்று காலை தாசில்தார் ஆண்டாள் தலைமையில் வருவாய்த்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செடிகள், மரக்கன்றுகள் வைத்திருந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு 14 ஏக்கர் பரப்பளவில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் இங்கு பஸ் ஸ்டாண்ட், கார் பார்க்கிங், மருத்துவ வசதி, சுகாதார வளாகம் உட்பட அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் என சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

