/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான நுாலகம், சமுதாயக்கூடம், துார்வாரப்படாத ஓடை
/
சேதமான நுாலகம், சமுதாயக்கூடம், துார்வாரப்படாத ஓடை
ADDED : அக் 28, 2025 03:27 AM

சாத்துார்: சேதமான நுாலகம், சமுதாயக்கூடம் , துார்வாரப்படாத ஓடை ,துப்புரவு பணியாளர் பற்றாக்குறையால் குவியும் குப்பை, கொசுக்கடி போன்றவற்றால் கே. மேட்டுப்பட்டி ஊராட்சி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியம் கே. மேட்டுப்பட்டி ஊராட்சியில் கே. மேட்டுப்பட்டி அருந்ததியர் காலனி ஆகிய பகுதிகள் உள்ளன. ஊராட்சியில் துப்புரவு பணியாளர் பற்றாக்குறையால் மக்கள் தாங்களாகவே குப்பைத்தொட்டிகளில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றனர்.
மேலமடை கண்மாயின் கழுங்கில் இருந்து தத்தி வரும் தண்ணீர் முழுவதும் ஊராட்சிக்கு நடுவில் உள்ள பெரிய ஓடை வழியாக செல்கிறது.இந்த ஓடையில் தற்பொழுது குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியாகும் கழிவு நீர் அதிக அளவில் கலந்து வருகிறது.
மேலும் ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்களும் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை இந்த ஓடைகளில் கொட்டி விடுகின்றனர். இதனால் ஓடை முழுவதும் குப்பையால் நிறைந்து காணப்படுகிறது. பல மாதங்களாக ஓடையை சுத்தம் செய்யாத நிலையில் தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளதால் துப்புரவு பணிகளை செய்து வருகிறார்கள்.
ஊராட்சி பகுதிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்கு 8 துப்புரவு பணியாளர்கள் இருந்தனர். தற்போது இருவர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால் சுகாதாரப் பணிகள் தேக்கமடைகின்றது. ஊராட்சியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொது சுகாதார வளாகம் இல்லாத நிலையில் மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
ஊராட்சியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் போதுமான கட்டடங்கள் இல்லாததால் இ .சேவை மைய கட்டடத்தில் வகுப்புகள் நடந்து வரும் நிலை உள்ளது.

