/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வண்டல் மண்ணில் ஓர் வசந்தம் வையம்பட்டியில் நுாறு நாள் ஊழியர்கள் அசத்தல்
/
வண்டல் மண்ணில் ஓர் வசந்தம் வையம்பட்டியில் நுாறு நாள் ஊழியர்கள் அசத்தல்
வண்டல் மண்ணில் ஓர் வசந்தம் வையம்பட்டியில் நுாறு நாள் ஊழியர்கள் அசத்தல்
வண்டல் மண்ணில் ஓர் வசந்தம் வையம்பட்டியில் நுாறு நாள் ஊழியர்கள் அசத்தல்
ADDED : ஆக 04, 2025 03:51 AM

கா ரியாபட்டி வையம்பட்டியில் எதற்குமே பயன்படாத வண்டல் மண்ணை பக்குவப்படுத்தி, ஓர் வசந்தத்தை உருவாக்கி இருக்கின்றனர்.
அரசு குறுங்காடுகளை உருவாக்கும் திட்டத்தின் படி நுாறு நாள் வேலை திட்ட ஊழியர்களை பயன்படுத்தி சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, நிலத்தை பக்குவப்படுத்தினர். கொன்றை, புளி, வேம்பு, புங்கை, வேங்கை, சவுக்கு, நீர் மருது, நாவல் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டனர். ஆடு, மாடுகள் கடிக்காத படி சுற்றி முள்வேலி அமைத்தனர்.
நீண்ட துாரம் நடந்து சென்று குடங்களில் எடுத்து, மரக்கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்தனர். தற்போது நன்கு வளர்ந்து பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. இதையடுத்து தண்ணீர் வசதிக்காக வரத்து ஓடைகளை தூர்வாரி, ஊருணிக்கு தண்ணீர் கொண்டு வந்தனர். சிறிது அளவு மழை பெய்தால் கூட ஊருணிக்கு எளிதில் தண்ணீர் கிடைத்துவிடும். எப்போதும் தண்ணீர் இருப்பதால் மரக்கன்றுகள் செழுமையாக வளர்ந்து, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
தற்போது புது குளம் வெட்டுதல் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை வையம்பட்டியில் துவக்கி, பணி முடித்து, பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். நாளடைவில் அருமையான கொடைக்கானல் ஏரி போல காட்சியளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்கனவே வண்டல் மண்ணில் ஒரு வசந்தத்தை உருவாக்கிய அக்கிராமத்தினர், அடுத்ததாக தெப்பக்குளம் போன்று வடிவமைப்பு கொண்ட புதுக் குளத்தை உருவாக்கி வருகின்றனர். வருங்கால சந்ததியினருக்கு வரப்பிரசாதமாக அமையும்.