/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மதுரை-தூத்துக்குடி 4 வழி சாலையில் விபத்துக்கள்
/
மதுரை-தூத்துக்குடி 4 வழி சாலையில் விபத்துக்கள்
ADDED : அக் 26, 2025 06:23 AM
காரியாபட்டி: மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால் பிரிவு ரோடுகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலை ஏற்படுத்தப்பட்ட பின், காற்றாலை ஏற்றி செல்லும் நீண்ட வாகனங்கள், கண்டெய்னர் லாரிகள், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் என அதிக அளவில் வந்து செல்கின்றன. இந்த வழித்தடத்தில் அடிப்படை வசதிகள் மிகக் குறைவு. போதிய சர்வீஸ் ரோடு கிடையாது. தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளில் சிறிய அளவிலான சர்வீஸ் ரோடுகள், அதுவும் ஒரு சில இடங்களில் மட்டும் உள்ளன. இரு வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு தான் இட வசதி உள்ளது.
இது ஒரு புறம் இருக்க, காரியாபட்டி, கல்குறிச்சி, பந்தல்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரிவுகள் உள்ளன. அது போன்ற பிரிவு ரோடுகளில் ரோட்டை கடக்க முற்படும் போது அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. ரோட்டை கடக்க மக்களும் படாதபாடு படுகின்றனர். ஏராளமானோர் விபத்தில் சிக்கி உயிர்பலி ஏற்பட்டுள்ளது. தொடர் விபத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தினமும் ஏதாவது ஒரு பிரிவு ரோட்டில் விபத்து ஏற்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு காரியாபட்டி கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் இரு லாரிகள் விபத்தில் சிக்கி, ஒரு லாரி ரோட்டிலும், மற்றொரு லாரி பள்ளத்திலும் கவிழ்ந்தது. அரை மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மற்ற நான்கு வழிச்சாலைகளில் விபத்து நடந்த உடன் நெடுஞ்சாலை பணியாளர்கள் அப்புறப்படுத்த விரைந்து வந்து விடுவர்.இந்த வழித்தடத்தில் பெரும்பாலான நேரங்களில் பணியாளர்கள் வருவது கிடையாது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் சிரமம் இருந்து வருகிறது. இதனை தவிர்க்க, முக்கிய பிரிவு ரோடுகளில் விரைந்து மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

