மதுரை – செங்கோட்டை இடையே கூடுதல் ரயில் சேவைக்கு எதிர்பார்ப்பு
மதுரை – செங்கோட்டை இடையே கூடுதல் ரயில் சேவைக்கு எதிர்பார்ப்பு
UPDATED : அக் 18, 2026 03:29 PM
ADDED : அக் 18, 2026 03:24 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை- – செங்கோட்டை வழித்தடத்தில் கூடுதலாக ஒரு பயணிகள் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை– குருவாயூர் ரயில் முன்னதாக 12 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. இதில் ஒரு ஏ.சி., பெட்டி, இரு ஸ்லீப்பர், 9 பொது பெட்டிகள் இருந்தன. பின்னர் இந்த ரயிலுக்கு எல்.எச்.பி., பெட்டிகள் வழங்கப்பட்டபோது பொது பெட்டிகளின் எண்ணிக்கை 8ஆக குறைந்தது. இதனால் பயணிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காக இந்த ரயிலில் 'விஸ்டாடோம்' பெட்டி இணைக்கப்பட உள்ளது. இதற்காக மேலும் ஒரு பொது பெட்டி குறைக்கப்படுகிறது. இதனால் ரயிலில் 7 பொது பெட்டிகள் மட்டுமே இருக்கும். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க மதுரையில் மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு செங்கோட்டை வந்து, பின்னர் அங்கிருந்து 6:15 மணிக்கு புறப்பட்டு இரவு 9:45 மணிக்குள் மதுரை வந்தடையும் வகையில் கூடுதலாக ஒரு பயணிகள் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
