அரசியலை ஆக்கிரமிக்கும் ஏ.ஐ., தொழில்நுட்பம்! தவறான, மிகையான தகவல்களால் குழம்பும் மக்கள்
அரசியலை ஆக்கிரமிக்கும் ஏ.ஐ., தொழில்நுட்பம்! தவறான, மிகையான தகவல்களால் குழம்பும் மக்கள்
UPDATED : மார் 18, 2026 07:24 AM
ADDED : மார் 18, 2026 05:40 AM

அருப்புக்கோட்டை :அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் நவீனமான ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறான தகவல்கள் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளை பதிவிட்டு மக்களை குழப்புவதால் தேவையான விழிப்புணர்வு அவசியமாகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில் நவீனமான தொழில்நுட்பங்கள் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இதை அரசியல் கட்சிகளும் விட்டு வைக்கவில்லை. புதியதாக ஏ.ஐ., (ஆர்டிபிசியல் இன்டலிஜென்ட்) என்ற தொழில்நுட்பத்தை தங்கள் ஐ.டி., பிரிவுகள் மூலம் பல்வேறு மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள், பிற கட்சிகளை விமர்சனம் செய்தல் உள்ளிட்டவைகளை பதிவிடுகின்றனர்.
ஒரு கட்சி மாற்று கட்சியை பற்றி பதிவிட்டால், பதிலுக்கு மாற்று கட்சியும் பதிவிடுகின்றன.
சமூக வலைதளங்களில் இதை பதிவிடுவால் இவற்றைப் பார்க்கும் மக்கள் அவற்றை உண்மை என நம்பும் சூழ்நிலையும் உள்ளது.
மேலும், கட்சித் தலைவர்கள் உள்ளிட்டவர்களை ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் மாற்றி பதிவிடுவதால் நம்பகத்தன்மைக்கு வேட்டு வைக்கிறது.
கிராமப்புற மக்கள் தற்போது அதிக அளவில் சமூக வலைதளங்களை பார்க்கின்றனர்.
பலருக்கு ஏ.ஐ., தொழில்நுட்பம் தெரியாமல் உள்ளது. இதனால், கட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளை பதிவிடுவதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும் தேர்தல் தேதி அறிவித்த நிலையில், இது போன்ற பதிவுகள் அதிக அளவில் வருவதால் கட்சிகளின் ஓட்டு வங்கி குறைய வாய்ப்பு உள்ளது.
தேர்தல் ஆணையம் இது குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த கட்சிகளுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.
