/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆம்புலன்சை திருடி சென்றவர் கைது
/
ஆம்புலன்சை திருடி சென்றவர் கைது
ADDED : பிப் 17, 2026 05:58 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எரிச்சநத்தத்தில் 108 ஆம்புலன்ஸை திருடி சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் நந்தி ரெட்டியாபட்டியை சேர்ந்தவர் குணசேகர பாண்டியன் 39. இவர் சிவகாசி அருகே எரிச்சநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9:00 மணி அளவில் ஆம்புலன்ஸை எரிச்சநத்தம் அங்கன்வாடி மையம் அருகே நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். 30 நிமிடம் கழித்து மீண்டும் வந்து பார்க்கையில் ஆம்புலன்ஸை காணவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் எம்.புதுப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துவிட்டு தங்களின் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
அவர்கள் ஜி.பி.எஸ்., மூலமாக பார்த்தபோது ஆம்புலன்ஸ் அருப்புக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. அருப்புக்கோட்டை 108 ஆம்புலன்ஸ் டிரைவர் முத்து கருப்பையாவிடம் தகவல் தெரிவித்தனர். அவர் அருப்புக்கோட்டை போலீசார் உதவியுடன் ஆம்புலன்சை மீட்டார். விசாரணையில் எம்.புதுப்பட்டி அருகே எம்.சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் 26, ஆம்புலன்ஸை திருடிச் சென்றது தெரிய வந்தது. எம்.புதுப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், கனகராஜ் கடந்த காலங்களில் தனியார் பள்ளி பஸ்சையும், லாரியையும் இதேபோல் எடுத்துச் சென்றுள்ளார். தற்போது மது போதையில் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றுள்ளார்.
திருடிச் செல்லும் வாகனங்களை விற்பதற்கு முயற்சி செய்வதில்லை. எங்காவது நிறுத்திவிட்டு வந்து விடுவார், என்றனர்.

