ADDED : ஜூன் 03, 2026 04:49 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் சூறாவளியில் வேரோடு மரங்கள் முறிந்து விழுவதால் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் சூறாவளி பலத்த சாரல் மழை பெய்து பழமையான மரங்கள் வேரோடு சார்ந்துள்ளது.
இரு வாரங்களுக்கு முன்பு மதுரை ரோட்டில் ஒரு மரம் வேரோடு முறிந்து விழுந்தது. மே 24 மாலை வத்திராயிருப்பு தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் வீசிய சூறாவளியில் மரங்கள் முறிந்து வீடுகள் சேதமடைந்தது. ஒரு பெண் உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் மாலை சில நிமிடங்கள் வீசிய சூறாவளியால் நகரின் பல்வேறு இடங்களில் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தது.
இவ்வாறு சமீப காலமாக சூறாவளி காற்றில் மரங்கள் வேரோடு சாய்வது வாகன ஓட்டிகளையும், நடந்து செல்பவர்களையும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது.
எனவே, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் முறிந்து நிற்கும் மரக்கிளைகளை வெட்டவும், மின் வயர்களை காப்பதற்காக ஒருபுறம் வெட்டப்படும் மரங்கள் சாய்ந்து வருவதையும் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
