/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் போலீசார் மீதான தாக்குதல்கள் தொடருது: பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையால் அச்சுறுத்தல்
/
மாவட்டத்தில் போலீசார் மீதான தாக்குதல்கள் தொடருது: பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையால் அச்சுறுத்தல்
மாவட்டத்தில் போலீசார் மீதான தாக்குதல்கள் தொடருது: பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையால் அச்சுறுத்தல்
மாவட்டத்தில் போலீசார் மீதான தாக்குதல்கள் தொடருது: பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையால் அச்சுறுத்தல்
ADDED : டிச 12, 2024 04:41 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் டி.எஸ்.பி., எஸ்.எஸ்.ஐ., ஏட்டுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் அடுத்தடுத்து நடந்துள்ளது. போலீசாருக்கான பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பெருமாள்தேவன் பட்டியைச் சேர்ந்த லோடு வேன் டிரைவர் காளிக்குமார் 33, செப். 2ல் திருச்சுழி ரோடு கேத்த நாயக்கன்பட்டி விலக்கில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் செப். 3ல் அருப்புக்கோட்டை - திருச்சுழி ரோட்டில் மறியல் செய்ய முயன்றனர். இவர்களை அப்போது அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., ஆக இருந்த காயத்ரி தலைமையிலான போலீசார் தடுக்க முயன்றனர்.
வாக்குவாதம் ஏற்பட்டு மறியலுக்கு முயன்றவர்களில் சிலர் டி.எஸ்.பி., தலை முடியை பிடித்து இழுத்து தாக்கினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் டி.எஸ்.பி., யை மீட்டு அழைத்து சென்றனர். தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்து, 116 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருக்கும் உயர் அதிகாரிகள் உடன் பாதுகாப்புக்கு போலீசாரை அழைத்து செல்ல வேண்டும். போலீசார் அனைவரும் சீருடையில் இருக்கும் போது கண்டிப்பாக லத்தி வைத்திருக்க வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ராஜபாளையம் பஞ்சு மார்கெட் அருகே தனியார் பார் முன் நவ. 10 இரவு 10:15 மணிக்கு இளைஞர்கள் சிலர் ரகளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கு போலீஸ் ஏட்டுக்கள் ராம்குமார், கருப்பசாமி கலைந்து செல்லமாறு தெரிவித்தனர்.
ஆனால் போலீசாரின் லத்தியை பிடுங்கிய 9 பேர் கும்பல் இருவரையும் தாக்கியது. இதனை அறிந்து எஸ்.ஐ., மாரியம்மாள் தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து காயமடைந்த இருவரையும் மீட்டு, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
விருதுநகரில் டிச. 9 மதியம் பழைய பஸ் ஸ்டாண்ட் முனியாண்டி கோயில் அருகே மது போதையில் இருந்த நான்கு வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இவர்களை ரோந்து சென்ற மேற்கு போலீஸ் எஸ்.எஸ்.ஐ., மாரிமுத்து 51, தட்டி கேட்டதால் நால்வரும் சேர்ந்து எஸ்.எஸ்.ஐ., தாக்கி கீழே தள்ளியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கு போலீசார் நால்வரையும் கைது செய்தனர்.
மாவட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் முதல் ஏட்டுக்கள் வரை பொது வெளியில் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற தாக்குதல் நடக்கும் போது மட்டும் எடுக்கப்படும் நடவடிக்கைகளால் எந்த பயனும் ஏற்படுவதில்லை. போலீசாரை தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக போலீசார் குற்றச்சாட்டுகின்றனர். மேலும் டி.எஸ்.பி., மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பின் வீடியோ எதுவும் வெளியே சென்று விடக்கூடாது என்பதில் மட்டுமே முனைப்பு காட்டுகின்றனர்.
மாவட்டத்தில் போலீசாருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை முழுமையாக அகற்ற வாய் வார்த்தைகளால் இல்லாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

