/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாட்டு கருவேல மரங்கள் வெட்டி கடத்த முயற்சி
/
நாட்டு கருவேல மரங்கள் வெட்டி கடத்த முயற்சி
ADDED : ஜூலை 15, 2025 03:10 AM

காரியாபட்டி: காரியாபட்டி மாங்குளம் கண்மாயில் சட்டவிரோதமாக நாட்டு கருவேல மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்தவர்களை கிராமத்தினர் தடுத்து நிறுத்தினர்.
காரியாபட்டி மாங்குளத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. வனத்துறை சார்பாக நாட்டு கருவேல மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டது. நன்கு வளர்ந்து தூர் பெருத்து காணப்பட்டது. அத்துடன் அதிக அளவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இந்நிலையில் பொது இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதனை அப்புறப்படுத்துவதற்கு இடங்களை பொறுத்து, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சீமை கருவேல மரங்கள் ஆங்காங்கே வெட்டப்பட்டு வருகின்றன. இதற்காக வாங்கப்பட்ட அனுமதியை வைத்துக்கொண்டு அங்குள்ள மற்ற மரங்களை வெட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து மாங்குளம் கண்மாயில் சீமை கருவேல மரங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி வைத்து, சட்டவிரோதமாக அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட நாட்டு கருவேல மரங்களை வெட்டி கடத்த முயற்சித்தனர். இதனை அறிந்த அக்கிராம இளைஞர்கள் திரண்டு, நாட்டு கருவேல மரங்களை கடத்த இருந்த நிலையில் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து வருவாய்த்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை, போலீசாரிடம் புகார் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.