/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மகளிர் நல வாரிய உறுப்பினர்களுக்கு.. இல்லையே ; திறன் பயிற்சியில் சேர விழிப்புணர்வு
/
மகளிர் நல வாரிய உறுப்பினர்களுக்கு.. இல்லையே ; திறன் பயிற்சியில் சேர விழிப்புணர்வு
மகளிர் நல வாரிய உறுப்பினர்களுக்கு.. இல்லையே ; திறன் பயிற்சியில் சேர விழிப்புணர்வு
மகளிர் நல வாரிய உறுப்பினர்களுக்கு.. இல்லையே ; திறன் பயிற்சியில் சேர விழிப்புணர்வு
ADDED : ஜூலை 31, 2025 05:54 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் நல வாரியத்தில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு திறன் பயிற்சியில் சேர விழிப்புணர்வு தேவை உள்ளது. 19 ஆயிரம் பேரில் 30 பேர் வரை தான் பயிற்சிக்கு வருகின்றனர். பலர் முன்வராமல் உள்ளனர்.
மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் மகளிர் நல வாரியம் செயல்படுகிறது. இதில் விதவை பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதிர்கன்னிகள், ஆதரவற்றவர்கள், நலிவுற்ற பெண்கள் சேர்ந்து திறன் பயிற்சிகள் பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். 2024ல் இதற்காக முகாம் நடத்தப்பட்டு நிறைய பெண்கள் சேர்க்கப்பட்டனர். இதில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களே பெரும்பாலானவர்கள். 1700 பேர் வரை 50 வயதுக்கு குறைவானவர்களாக உள்ளனர். இதில் 332 பேர் திறன் பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்து 30 பேர் தான் பயிற்சிக்கு வருகின்றனர்.
இந்த திறன் பயிற்சியில் தையல் கலை, ஆரி எம்பிராய்டரி, கணினி பயிற்சி, தட்டச்சு, கேட்டரிங், அழகுக்கலை, டிரைவிங் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில் தையல் கலைக்கே பெரும்பாலான பெண்கள் பயில்கின்றனர். தற்போது ராஜபாளையத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்து வருகிறது. ஆனால் வாரியத்தில் சேர்ந்த அனைத்து பெண்களுக்கும் திறன் பயிற்சி அளிக்க வேண்டும் என்பது முக்கிய எதிர்பார்ப்பு.
காரணம் வாழ்வாதாரம் இன்றி பலர் பயிற்சி எடுக்காமல், கூலி வேலைக்கு செல்கின்றனர். ஆதரவு இல்லாததால் கடும் சிரமம் ஏற்படுகிறது. இந்த பயிற்சியை தாலுகா தோறும் ஏற்படுத்த சமூகநலத்துறை முன்வர வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு நல வாரியத்தின் பயன்கள் குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக தையல் உள்ளிட்ட எந்த பயிற்சிக்கும் 45 நாட்கள் கால அவகாசம். பயிற்சியை முழுமையாக பெற்றால் ரூ.12 ஆயிரம் ஊக்க ஊதியமாக வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கான அரசு சான்றும் வழங்கப்படும். இது போன்ற நன்மைகளை எடுத்துக் கூற வேண்டும். அதே நேரம் மாவட்ட நிர்வாகம் ராஜபாளையம் தவிர்த்து சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர் போன்ற பகுதகிளிலும் பயிற்சி அளித்தால் பெண்கள் 45 நாட்களும் பங்கேற்க வசதியாக இருக்கும். ஆனால் பெண்கள் முன் வந்தால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மூலம் தாலுகா தோறும் பயிற்சி அளிக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் ஆதரவற்ற, விதவை பெண்கள் தான் விழிப்புணர்வு இன்றி உள்ளனர்.
பணவீக்கம், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அனாதரவாக நிற்கும் பெண்களுக்கு ஆதரவாக செயல்படும் இந்த மகளிர் நல வாரியங்களை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.