அதிவேகமாக டூவீலர்களில் செல்லும் சிறுவர்கள் விபரீதம்:கண்டுகொள்ளாத போலீசாரால் விபத்தில் சிக்கும் அபாயம்
அதிவேகமாக டூவீலர்களில் செல்லும் சிறுவர்கள் விபரீதம்:கண்டுகொள்ளாத போலீசாரால் விபத்தில் சிக்கும் அபாயம்
UPDATED : மே 21, 2026 05:06 PM
ADDED : மே 21, 2026 05:00 PM

சாத்துார்:தற்போதய கோடை விடுமுறையில் சிறுவர்களும், சிறுமிகளும் டூவீலரை அதிவேகமாக ஓட்டுகின்றனர். இவர்களை போலீசார் கண்டுகொள்ளாததால் விபத்தில் சிக்கும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
eமாவட்டத்தில் மெயின்ரோடு, ரயில்வே பீடர் ரோடு, ரத வீதிகளில் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் , பள்ளி, கல்லுாரிகள் ,ஹோட்டல்கள் வங்கிகள் என போக்குவரத்து நெருக்டி மிகுந்த பல பகுதிகளில் 18 வயது கூட நிரம்பாத சிறார்கள் டூ வீலர்களை அதிவேகமாக ஓட்டி செல்வது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை ,மாலை நேரங்களில் அதிவேகமாக சிறார்கள் டூ வீலர்களை கூட்டத்திற்கு நடுவே ஓட்டி செல்கின்றனர்.
ஹெல்மெட் கூட அணியாத நிலையில் மினி பஸ் ஆட்டோக்களுக்கு இடையே கட்டடித்து புகுந்து செல்லும் சிறார்களால் மற்ற வாகன ஓட்டிகள் அச்சப்படும் நிலை உள்ளது.மின்னல் வேகத்தில் கட்டடித்து கூட்டத்திற்கு நடுவே செல்லும் சிறார்களை போக்குவரத்து போலீசார் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.
கட்டட வேலைகளுக்கும் கூலி தொழிலுக்கும் சென்று விட்டு டூ வீலரில் திரும்பும் தொழிலாளர்களை நிறுத்தும் போலீசார் அவர்களுக்கு ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி அபராதங்கள் விதிக்கின்றனர்.
மக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை இயக்கும் சிறார்களை மட்டும் போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர் .
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அதிவேகமாக சிறார்கள் இருசக்கர வாகனங்கள் இயக்குவதை தடுப்பதோடு அவ்வாறு வேகமாக செல்லும் டூவீலர்களின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கவும் சிறார்கள் டூ வீலர்கள் ஓட்டுவதை தடுக்கவும் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . வட்டார போக்குவரத்து துறையினரும் சிறுவர்களுக்கு டூவீலர்கள் கொடுக்கும் உரிமையாளரின் லைசென்ஸ்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
