/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் சிவகாசியில் குப்பையாக மாறிய அவலம்
/
குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் சிவகாசியில் குப்பையாக மாறிய அவலம்
குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் சிவகாசியில் குப்பையாக மாறிய அவலம்
குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் சிவகாசியில் குப்பையாக மாறிய அவலம்
ADDED : ஆக 16, 2025 11:57 PM

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் பழுதடைந்து குப்பையாக மாறியதால் துாய்மை பணியில் பாதிப்பு ஏற்படுகிறது என மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் ஒன்று முதல் 24 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் சேர்த்து 152 தெருக்கள் உள்ளன. திருத்தங்கல் நகராட்சியாக இருந்தபோது 2011ல் எடுத்த மக்கள் தொகை கணக்கின்படி 55 ஆயிரம் பேர் வசித்தனர். இந்த மக்கள் தொகையின் படி இங்கு 227 துாய்மை பணியாளர்கள் பணி புரிய வேண்டும். ஆனால் அப்போதே 20 நிரந்தர துாய்மை பணியாளர்களும், 50 பேர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தனர். இதனால் வாறுகால் துார்வாறுதல், குப்பை சேகரித்தல் போன்ற துாய்மை பணியை மேற்கொள்வதற்கு சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
தற்போது திருத்தங்கலில் 75 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். ஆனால் இப்போதும் குறைந்த அளவு துாய்மை பணியாளர்கள் பணி புரிகின்றனர். இப்பகுதியில் குப்பை சேகரிப்பதற்கு என மூன்று வாகனங்கள் மட்டுமே உள்ளது. இதனால் வழக்கம் போலவே சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்படுகின்றது. தூய்மை பணிக்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டிருந்தது. இந்த வாகனங்கள் குறுகிய தெருக்களில் உள்ளே சென்று குப்பை சேகரிப்பதற்கு பயன்பட்டு வந்தது.
ஆனால் தற்போது பேட்டரி வாகனங்களில் 20 க்கும் மேற்பட்டவை சேதம் அடைந்து பயன்பாட்டில் இல்லை. தவிர தள்ளு வண்டிகளும் சேதம் அடைந்துள்ளது. இதனால் குறுகிய தெருக்களில் குப்பை சேகரிப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது. குப்பை சேகரிக்க வழி இல்லாமல் ரோட்டில் ஆங்காங்கே கொட்டப்படுகின்றது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகின்றது. எனவே திருத்தங்கலில் கூடுதல் துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பேட்டரி வாகனங்களை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.