/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வேளாண் பல்கலை நிலத்தை சிப்காட்டிற்காக கையகப்படுத்தினால் முதல்வருக்கு கருப்புக்கொடி
/
வேளாண் பல்கலை நிலத்தை சிப்காட்டிற்காக கையகப்படுத்தினால் முதல்வருக்கு கருப்புக்கொடி
வேளாண் பல்கலை நிலத்தை சிப்காட்டிற்காக கையகப்படுத்தினால் முதல்வருக்கு கருப்புக்கொடி
வேளாண் பல்கலை நிலத்தை சிப்காட்டிற்காக கையகப்படுத்தினால் முதல்வருக்கு கருப்புக்கொடி
ADDED : ஆக 03, 2025 04:58 AM
காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் கோவை வேளாண் பல்கலை மண்டல கரிசல் மண் ஆராய்ச்சி நிலைய நிலங்களை, சிப்காட்டிற்காக கைப்பற்றுவதை கைவிட மறுத்தால், தென் மாவட்டங்களுக்கு முதல்வர் வரும்போது விவசாயிகள் கருப்புக் கொடி காட்டுவோம், என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர், பாண்டியன், தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் கோவை வேளாண் பல்கலைக்கு சொந்தமான மண்டல ஆராய்ச்சி நிலையம் 202 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் வறட்சி பகுதிகளில் நீரின்றி விளைய கூடிய மருத்துவ குணம் கொண்ட பயிர் வகைகள் பயிரிடப்பட்டு வருகிறது. பழ வகைகள், நெல், தினை, நிலக்கடலை உள்ளிட்ட பணப்பயிர்களும் பயிரிட்டு ஆய்வு செய்து, வெற்றி கண்டு வருகிறது.
விருதுநகர், தூத்துக்குடி வரையில் தரிசாக கிடக்கும் விளை நிலங்களில், தண்ணீர் இன்றி விளைவிக்கப்படும் பயிர் வகைகளை சாகுபடி செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. புகழ்மிக்க மண்டல ஆராய்ச்சி மையத்தை கையகப்படுத்தி, பண்ணையை அகற்றிவிட்டு, 500 ஏக்கர் நிலங்கள் விலை கொடுத்து வாங்கி, அப்பகுதியில் சிப்காட் அமைக்க வேண்டும் என்கிற சுயநலத்தோடு சிலர் செயல்படுகின்றனர்.
அதுமட்டுமல்ல, முக்கிய அரசியல் பிரமுகருக்கு சொந்தமான இடங்கள் இருப்பதால், அதற்கு மதிப்பு கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 129 ஏக்கர் நிலங்களை கையகப் படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பேச்சு வார்த்தையின் போது, பல்கலைக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்க வேண்டும் என்பதை தெரிவித்தோம்.
கலெக்டரும் பரிசீலிப்பதாக உறுதி அளித்தார். எதிர்ப்புகளையும் மீறி, பல்கலைக்குள் 50 அடி அகலத்தில் ரோடு அமைக்க முயற்சிப்பதை அனுமதிக்க மாட்டோம். வேளாண் ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான ஒரு துளி இடத்தை கூட கைப்பற்ற விடமாட்டோம். மீறினால் தென் மாவட்டங்களுக்கு முதல்வர் வரும்போது கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கிறோம். ஆராய்ச்சி நிலையத்திற்கு சொந்தமான இடங்களை பாதுகாப்பதோடு, தேவையான தொழில்நுட்பத்தை புகுத்தி, மேம்படுத்த முதல்வர் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.