/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் பலி
/
தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி சிறுவன் பலி
ADDED : மார் 21, 2025 11:43 PM
விருதுநகர்; விருதுநகர் மீசலுாரைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் வைஷ்ணவ் 9. தாதம்பட்டி அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். இவரது தந்தை பாக்கியராஜ் டிரைவராக உள்ளார். தாய் முத்துலட்சுமி நுாறு நாள் வேலைக்கு செல்கிறார்.
வைஷ்ணவ் ஒரு மாதமாக சரிவர பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். பள்ளி சீருடை அணிந்து பள்ளிக்கு செல்வது போல் சென்று விட்டு, தாய் வேலைக்கு சென்றதும், வீட்டிற்கு வந்து 'டிவி' பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.நேற்று காலை தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மதியம் 2:00 மணிக்கு வேலை முடித்து வீட்டிற்கு வந்த தாய் முத்துலட்சுமி கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததை அறிந்தார்.
தட்டி பார்த்தும் திறக்கவில்லை. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற போது வைஷ்ணவ், வீட்டின் விட்டத்தில் இரும்பு கொக்கியில் மாட்டியிருந்த தொட்டில் கயிற்றில் கழுத்து இறுகி மயங்கி கிடந்தான். அவனை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று டாக்டரிடம் பரிசோதித்ததில் இறந்தது தெரிந்தது. சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர். வீட்டில் தனியாக இருந்த போது தொட்டிலில் விளையாடிய போது கயிறு கழுத்தில் இறுகி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.