/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாய்ப்பால் வங்கிக்கு அதிக நன்கொடையாளர்கள் தேவை: மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்துமா
/
தாய்ப்பால் வங்கிக்கு அதிக நன்கொடையாளர்கள் தேவை: மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்துமா
தாய்ப்பால் வங்கிக்கு அதிக நன்கொடையாளர்கள் தேவை: மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்துமா
தாய்ப்பால் வங்கிக்கு அதிக நன்கொடையாளர்கள் தேவை: மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்துமா
UPDATED : ஜூன் 19, 2025 04:10 AM
ADDED : ஜூன் 18, 2025 11:25 PM

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில்2019 முதல் தாய்ப்பால் வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி தற்போது நவீனப்படுத்தப்பட்டு தாய்ப்பாலை சேமித்து வைப்பதற்காக 3 குளிர்சாதன வசதியுடன் கூடிய சேமிப்பு அமைப்புகள் உள்ளது.
இங்கு ஒரு மாதத்திற்கு 20 முதல் 30 லிட்டர் வரை தாய்ப்பால் தானமாக பெறப்பட்டு 100 முதல் 150 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு அவர்களிடம் இருந்து மாதத்திற்கு 15 முதல் 20 லிட்டர் வரையும், சிவகாசியைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக 5 முதல் 7 லிட்டர் வரையும் தானமாக பெறப்படுகிறது.
தாய்ப்பால் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கிருமிகள் எதுவும்இல்லை என தெரியவந்ததும் மைனஸ் 15 முதல் மைனஸ் 22 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பநிலையில் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் தாய்ப்பால் பற்றாக்குறை அதிகரிக்கும் போது சேமிப்பில் இருப்பதை வைத்தே சமாளிக்கும் நிலை தொடர்கிறது.
இங்கு 300 லிட்டர் அளவுக்கும் மேல் தாய்ப்பாலை சேமித்து வைக்கும் வசதிகள் இருந்தும் சில நேரங்களில் தேவையை விட குறைவான அளவே தாய்ப்பால் வங்கிக்கு தானமாக வழங்கப்படுகிறது. விருதுநகர், அதனை சுற்றிய பகுதிகளைச் சேர்ந்த தாய்மார்கள் நேரடியாக அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்து தாய்ப்பால் தானமாக கொடுக்கின்றனர்.
அரசு மருத்துவமனையில் பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்களால் தாய்ப்பால் தானம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. ஆனால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்களில் தாய்ப்பால் தானம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்லை.
மேலும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கண், ரத்தம், உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல தாய்ப்பால் தானம் குறித்தும் சரியான விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து விருதுநகர் அரசு மருத்துவமனை டீன் ஜெயசிங் கூறியதாவது:
பொதுவாக சுவாச கோளாறுகள், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள குழந்தைகள், தாயால் போதிய பால் சுரக்க முடியாமல் தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு தானமாக பெறப்படும் தாய்ப்பால் வழங்கப்படுகிறது.
மருத்துவமனையில் 300 லிட்டர் அளவுக்கு மேல் தாய்ப்பாலை சேமித்து வைக்கும் வசதிகளும், தாய்மார்கள் எளிதாக தாய்ப்பால் தானமாக கொடுப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாய்ப்பால் தானமாக கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக மகப்பேறு மருத்துவமனைக்கு வந்து கொடுக்கலாம், என்றார்.