/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் குழாய்கள் உடைந்து வீணாகுது குடிநீர்
/
சாத்துாரில் குழாய்கள் உடைந்து வீணாகுது குடிநீர்
ADDED : டிச 27, 2025 06:00 AM
சாத்துார்: சாத்துாரில் பல இடங்களில் குடிநீர் பகிர்மான குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வரும் நிலையில் இவற்றை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விரைந்து சரி செய்ய வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சாத்துார்-கோவில்பட்டி நான்கு வழி சாலை மேற்கு பக்கம் சர்வீஸ் ரோட்டில் சத்திரப்பட்டி விலக்கு அருகே குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
மேலும் அமீர் பாளையம் முதல் தெரு எதிரில் உள்ள வைப்பாறு பழைய பாலம் அருகில் செல்லும் குடிநீர் குழாயும் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
இதேபோன்று சிதம்பரம் நகரில் நுழைவுப் பகுதியிலும் மேல காந்தி நகரில் அல்லா மரம் அருகிலும் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
தற்போது நகராட்சி பகுதியிலும் ஊராட்சி பகுதியிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படும்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த உடைப்பை ஒப்பந்த தாரர்கள் மூலம் சரி செய்து வருகின்றனர்.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் நகராட்சி மற்றும் ஊராட்சி களுக்கு குடிநீர் வினி யோகம் ஆகி வரும் நிலையில் நகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைகிறதா அல்லது ஊராட்சிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைகிறதா என தெரியாமல் இரு நிர்வாகத்தினரும் தங்கள் பொறுப்பை தட்டி கழித்து வருகின்றனர்.
இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் வீணாகி வருகிறது.குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய குடிநீர் வடிகால் வாரியத்தினர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

