/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி வீரசோழனில் கருகி வரும் மரக்கன்றுகள்
/
நரிக்குடி வீரசோழனில் கருகி வரும் மரக்கன்றுகள்
ADDED : மே 02, 2025 05:53 AM

நரிக்குடி: நரிக்குடி வீரசோழனில் கண்மாய் கரையோரம் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி கருகி வருகின்றன. தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நரிக்குடி வீரசோழனை சுற்றி சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கிடக்கின்றன. கண்மாயிலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கிடப்பதால், விவசாயம் கால்நடை வளர்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. போதிய மரங்கள் இல்லாததால் அப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மரக்கன்றுகளை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கண்மாய் கரை ஓரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆடு, மாடுகள் கடிக்காத படி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டன. சரிவர மழை இல்லாதது, தண்ணீர் ஊற்றாதது உள்ளிட்ட காரணங்களால் வெயிலுக்கு கருகி வருகின்றன. அப்பகுதியில் மரங்களின் அவசியத்தை உணர்த்தி, மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.