எரிச்சநத்தத்தில் அடிப்படை வசதிகளுடன் பஸ் ஸ்டாண்ட் அமைக்க எதிர்பார்ப்பு
எரிச்சநத்தத்தில் அடிப்படை வசதிகளுடன் பஸ் ஸ்டாண்ட் அமைக்க எதிர்பார்ப்பு
UPDATED : நவ 27, 2026 04:58 PM
ADDED : நவ 27, 2026 04:58 PM
சிவகாசி: சிவகாசி அருகே எரிச்சநத்தத்தில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் அனைத்து பஸ்களும் பயணிகளை ரோட்டிலேயே ஏற்றி இறக்கி செல்கிறது. எனவே இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
எரிச்சநத்தத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வங்கிகள், உதவி தொடக்க கல்வி அலுவலகம், அரசு பள்ளிகள், உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள குமிலங்குளம், செவலுார் சித்தமநாயக்கன்பட்டி, நடையனேரி பர்மா காலனி, இ.புதுப்பட்டி தாழி குளத்துப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்கும் எரிச்சநத்தம் வருகின்றனர். சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சந்தையாகவும் இருப்பதால் எப்பொழுதும் மக்கள் அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றனர். இப்பகுதி மக்கள் விருதுநகர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் செல்ல வேண்டுமென்றால் எரிச்சநத்தம் வந்து தான் பஸ் ஏறி செல்ல வேண்டும்.
இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் அரசு, தனியார் பஸ்கள் மெயின் ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் ஏற்படுகிறது. மழை, வெயில் காலங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் ஒதுங்க இடம் இன்றி ரோட்டிலும் கடைகளின் ஒரமும் நிற்க வேண்டியுள்ளது. எனவே எரிச்சநத்தத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
