ADDED : ஆக 24, 2026 03:10 PM
ஸ்ரீவில்லிபுத்துார், ஆக 25-
மதுரை, தேனி, செங்கோட்டை, திருநெல்வேலியில் இருந்து வரும் பஸ்கள் நத்தம்பட்டியில் நின்று செல்ல மறுப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நத்தம் பட்டியை சுற்றி மூவரை வென்றான், வடுகப்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, சொக்கம்பட்டி உட்பட பல கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் தொழில், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்புக்காக மதுரை, தேனி, செங்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர், கோவில்பட்டி போன்ற நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர். நான்கு வழிச்சாலை அமைக்கும் முன்பு அனைத்து பஸ்களும் நத்தம் பட்டியில் நின்று சென்ற நிலையில் தற்போது
நின்று செல்லாமலும், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளை ஏற்ற மறுத்தும் அலட்சியத்துடன் மேம்பாலத்தில் பயணிக்கின்றனர்.
இதனால் தங்கள் கண் முன்பே பல பஸ்கள் செல்லும் நிலையில் நத்தம் பட்டியில் நிற்காதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர்.
இதனால் கண்டக்டருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடந்த மாதம் கூட ஒரு தனியார் பஸ் டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனாலும் தொடர்ந்து நத்தம் பட்டியில் பயணிகளை ஏற்றிச் செல்ல மறுப்பதும், நின்று செல்ல மறுப்பதும் மக்களை சிரமத்துக்கு ஆளாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.
எனவே, அனைத்து பஸ்களும் நத்தம் பட்டியில் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
