ADDED : ஜூன் 07, 2026 02:09 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ரோடு ஓரங்களில் குப்பைகளுடன் பாலிதீன் கவர்களில் உணவுகழிவுகளும் கொட்டப்படுகிறது. உணவுகளுடன் சேர்த்து பாலிதீன் கவர்களை உண்ணும் கால்நடைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நகர், புறநகர், ஊரகப்பகுதிளில் பல்வேறு உணவகங்கள் செயல்படுகிறது. இவற்றில் தற்போது பெரும்பாலும் பேப்பர் கவர் என்ற பாலிதீன் கவரை சில்வர் தட்டுகளின் மீது விரித்து உணவுகளை வாடிக்கையாளர்கள் உட்கொள்ள கொடுக்கின்றனர்.
இவற்றை பயன்படுத்த தடை இருந்தும் பல உணவகங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உணவுகளை உட்கொண்ட பின் இந்த கவர்களை அப்படியே மொத்தமாக சேர்த்து குப்பையுடன் உணவக ஊழியர்கள் ரோடு ஓரங்களில் கொட்டி விடுகின்றனர்.
வீடுகள், உணவகங்களில் இருந்து வெளியேறும் உணவுகழிவுகளை பாலிதீன் கவர்களில் வைத்து குப்பையோடு குப்பையாக ரோடு ஓரங்களில் வீசி செல்கின்றனர். இந்த குப்பையை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பணியாளர்கள் முறையாக அகற்றுவதில்லை. மேய்ச்சலுக்கு அழைத்து செல்லப்படாமல் அப்படியே வெளியில் விடப்பட்ட கால்நடைகள் பாலிதீன் பைகளில் உள்ள உணவுக்கழிவுகளை உண்ண முயன்று பாலிதீன் கவரையும் சேர்த்து உட் கொள்கின்றன.
மாநகராட்சி, நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பின்பற்றப்பட்ட பின்பும் தற்போது வரை பிளாஸ்டிக் குப்பை பொது வெளியில் கொட்டப்படுவது குறையவில்லை. இதனால் கால்நடைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே உள்ளாட்சி, நகராட்சி, மாநாகராட்சி நிர்வாகங்கள் உணவு பொருட்களை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவரில் கொடுக்கும், வாடிக்கையாளர்களுக்கு பரிமாறும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
