சேதமடைந்த வகுப்பறை கட்டடங்களை பராமரிக்கலாமே:பள்ளி துவங்குவதற்கு முன் செய்ய எதிர்பார்ப்பு
சேதமடைந்த வகுப்பறை கட்டடங்களை பராமரிக்கலாமே:பள்ளி துவங்குவதற்கு முன் செய்ய எதிர்பார்ப்பு
UPDATED : மே 14, 2026 04:55 PM
ADDED : மே 14, 2026 04:51 PM

சிவகாசி:மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி துவங்குவதற்குள் சேதமடைந்த வகுப்பறை கட்டடங்களை சீரமைக்க வேண்டும், பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 159 நடுநிலைப் பள்ளிகள், 91 உயர்நிலை, 99 மேல்நிலை என 349 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 40 முதல் 50 சதவீத பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளது. இவற்றில் பெரும்பான்மையான வகுப்பறை கட்டடங்களில் கூரை சேதமடைந்து உள்ளது.
தவிர பக்கச் சுவர்கள் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன் துாண்களும் சேதம் அடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவர்கள் ஆசிரியர்கள் அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது. சிவகாசி அருகே பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் இதே நிலை தான் உள்ளது.
கடந்த காலங்களில் பல்வேறு அரசு பள்ளிகளில் சேதம் அடைந்த வகுப்பறை கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்ட பின்னரே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதற்கு இடம் அளிக்காமல் பள்ளி துவங்குவதற்கு முன்பாகவே சேதம் அடைந்த கட்டடங்களை சீரமைக்க வேண்டும்.
தவிர 80 சதவீதம் அரசு பள்ளிகளில் வளாகம் சமதளத்தில் இல்லாமல் சீரமைக்கப்படவில்லை. ஆங்காங்கே பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது. இதனால் சிறிய மழை பெய்தாலும் பள்ளி வளாகம் முழுவதுமே தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கி விடுகின்றது.
இதனை கடந்து தான் ஆசிரியர்கள், மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. தவிர தொற்றுநோய் பாதிப்பிற்கும் ஆளாகின்றனர். எனவே மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சேதம் அடைந்த வகுப்பறை கட்டடங்களை சீரமைப்பதோடு பள்ளி வளாகத்திலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
