ADDED : பிப் 15, 2024 04:49 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பு மலை அடிவார தோப்புகளில் யானைகள் புகுந்து தென்னை, பனை மரங்களை வேரோடு சாய்த்ததால் விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் மா, தென்னை, வாழை, கொய்யா, பலா உள்ளிட்ட பல்வேறு விவசாயம் நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மலையடிவார பகுதியில் இருந்து விவசாய பகுதிக்கு புகுந்த யானை கூட்டங்களால் தோப்புகளில் உள்ள மரங்கள் சேதம் அடைந்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி முத்தையா: மலை அடிவார பகுதியில் யானைகளால் தென்னை, மா, வாழை மரங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தோம். தொடர்ந்து ரோந்து சென்று வனத்திற்குள் யானைகள் விரட்டப்படும் என பதில் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று வனப்பகுதி ஒட்டிய தோப்புகளிலும் அதனை ஒட்டிய பகுதிகளில் புகுந்த யானை கூட்டம் ஐம்பதற்கும் மேற்பட்ட தென்னை, பனை மரங்களை வேரோடு சாய்த்தும், மரங்களை சேதப்படுத்தியும் சென்றுள்ளன. இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் யானைகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
