/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் சிரமத்தில் பயணிகள்
/
வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் சிரமத்தில் பயணிகள்
வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் சிரமத்தில் பயணிகள்
வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் சிரமத்தில் பயணிகள்
ADDED : மே 16, 2025 02:50 AM

சிவகாசி: வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் அனைத்து பஸ்களும் பயணிகளை ரோட்டிலேயே ஏற்றி இறக்கி செல்கிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்தும் ஏற்படுகிறது. எனவே இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலகம், தீயணைப்பு நிலையம், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், அரசு பள்ளிகள், போலீஸ் ஸ்டேஷன் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் வெம்பக்கோட்டையைச் சுற்றிலும் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சந்தையாகவும் இருப்பதால் எப்பொழுதும் மக்கள் அதிக அளவில் பல்வேறு தேவைகளுக்கும் வந்து செல்கின்றனர்.
இந்த ஒன்றியத்தில் உள்ள 48 ஊராட்சி மக்களுமே இங்கு பல்வேறு தேவைகளுக்கும் வருகின்றனர். வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளம், சாத்துார், கோவில்பட்டி, சங்கரன்கோவில், கழுகுமலை, திருவேங்கடம் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் இங்கு பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் அரசு, தனியார் பஸ்கள் வெம்பக்கோட்டை ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் ஏற்படுகிறது. மழை, வெயில் காலங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் ஒதுங்க இடம் இன்றி ரோட்டிலும் கடைகளின் ஓரமும் நிற்க வேண்டியுள்ளது.
பள்ளி மாணவர்கள் தங்களையும், புத்தகப் பைகளையும் காத்துக் கொள்வதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே வெம்பக்கோட்டையில் விரைவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இப்பகுதியினர் கூறுகையில், வெம்பக்கோட்டையில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் ரோட்டிலேயே பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்திற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கு போலீஸ் குடியிருப்புகள் அருகே காலியிடம் உள்ளது. எனவே இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.