/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு
/
நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு
ADDED : மார் 04, 2024 04:40 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு வனச்சரகங்களிலும், அருப்புக்கோட்டை, திருச்சுழி, விருதுநகர், சாத்தூர், சிவகாசி நகர் பகுதியிலும், மதுரை மாவட்டம் சாப்டூர் வனச்சரகம் சதுரகிரி கோயில் மலைப்பகுதி உட்பட 30 இடங்களில் நடந்த நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று நிறைவடைந்தது
தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஜனவரி 27, 28லும், நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி மார்ச் 2, 3 தேதிகளிலும் நடத்த தமிழக வனத்துறை அறிவுறுத்தி இருந்தது
அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு வனச்சரக பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் உட்பட 30 பகுதிகளிலும் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பணியை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
இதில் வனத்துறையினர், பறவை ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பறவைகளை படம் பிடித்தனர். நேற்று மாலை வனச்சரக அலுவலகங்களில் தங்களது பதிவுகளை சமர்ப்பித்தனர். இதனை வனத்துறையினர் முறையாக ஆய்வு செய்த பிறகு மாவட்டத்தில் என்னென்ன வகை பறவைகள் உள்ளன என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். தற்போது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகளவில் பெய்துள்ள நிலையிலும், அணைகள், கண்மாய், குளங்களில் தண்ணீரில் இருந்த போதிலும் கடந்த இரண்டு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மாவட்டத்தில் வழக்கமான உள்ள பறவைகளை காணப்பட்டது. புதிதாக எவ்வித பறவைகளும் காணப்படவில்லை என பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

