ADDED : ஜன 10, 2026 06:15 AM

சாத்துார்: ''காமராஜரை வைத்து பழம் சாப்பிட்ட காங்கிரஸ் கட்சி அவரை மறந்து விட்டது'' என நாடார் மகாஜன சங்க மாநில பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தெரிவித்தார்.
காமராஜரை பற்றி அவதுாறாக பேசிய யுடியூபர் முக்தார் அப்பாசை கைது செய்யக்கோரி நாடார் மகாஜன சங்கம் சார்பில் கடையடைப்பும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் அசோகன் முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் கனக ரத்தினம், மதுரை ராஜசேகர் வர வேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கரிக்கோல்ராஜ் கூறிய தாவது:
நாடார் சமுதாயம் தன் உழைப்பால் உயர்ந்த சமுதாயம். 1910 லேயே நாடார் சமுதாயத்தை சேர்ந்த பெரியோர்களால் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டது. ஆனால் காமராஜர் 1954 -- 1957ல் தான் அரசியலுக்கு வந்தார். நாடார் சமுதாயம் காமராஜரை பயன் படுத்திக் கொள்ளவில்லை. காமராஜரை வைத்து பழம் சாப்பிட்ட காங்கிரஸ் கட்சி அவரை மறந்து விட்டது.
நாடார் மகாஜன சங்கம் நாடார் சமுதாய தலைவராக காமராஜரை ஏற்றுக் கொண்டுள்ளது.யூடியூப் சேனலில் காமராஜர் குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட முக்தார் மீது நாடார் சங்கம் சார்பில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தும் அவர் மீது எப். ஐ.ஆர். பதிவு செய்யப்பட வில்லை.
யுடியூபர் சவுக்கு சங்கர் மீது மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறையினர் இவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன். இன்னும் 40 நாட்களில் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்றார்.
ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென சிலர் அவரின் உருவ பொம்மையை எரித்தனர்.இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி அணைக்க முயன்ற போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் சாத்துார் நாடார் மகாஜன சங்கத் தலைவர் சி .பி . ஜெயச்சந்திரன் உள்பட பல்வேறு கட்சியினரும் பங்கேற்றனர்.

