திருத்தங்கல் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் துவக்கம்
திருத்தங்கல் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் துவக்கம்
ADDED : பிப் 18, 2026 07:55 AM

சிவகாசி: திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் நேற்று துவங்கியது. திட்டமிட்ட காலத்தில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவகாசி சாட்சியா புரம், திருத்தங்கல் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு 2024 ல் பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
முதற்கட்டமாக சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் ரூ.62 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை இரு மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது. இதையடுத்து திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் 804 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தாயார் செய்யப்பட்டது.
இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த ரூ.32 கோடியும், மேம்பால கட்டுமான பணிக்கு ரூ.45.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜன. 18ல் கட்டுமான பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் நில எடுப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் பாலம் கட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் ரயில்வே கேட்டில் இருந்து சிவகாசி ரோட்டில் உள்ள தனியார் கட்டடங்கள் இடிக்கப் பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று பில்லர் அமைப்பதற்காக பணிகள் துவங்கியது.
அதிகாரிகள் கூறுகையில், ரயில்வே கேட்டில் இருந்து விருதுநகர் ரோட்டில் 10 பில்லர்களும் சிவகாசி ரோட்டில் 5 பில்லர்களும் அமைக்கப்பட உள்ளது.
சிவகாசி ரோட்டில் உள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ள நிலையில் பில்லர்கள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. 15 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் போலவே இங்கும் திட்டமிட்ட காலத்தில் பணிகள் முடிந்து பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றனர்.
