/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூரியர் வேன்களில் தொடரும் சோதனை; அரசியல்வாதிகளின் வாகனங்களில் தயக்கம்
/
கூரியர் வேன்களில் தொடரும் சோதனை; அரசியல்வாதிகளின் வாகனங்களில் தயக்கம்
கூரியர் வேன்களில் தொடரும் சோதனை; அரசியல்வாதிகளின் வாகனங்களில் தயக்கம்
கூரியர் வேன்களில் தொடரும் சோதனை; அரசியல்வாதிகளின் வாகனங்களில் தயக்கம்
ADDED : ஏப் 13, 2024 02:31 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அரசியல் வாதிகளின் வாகனங்களை சோதனையிடுவதில் தயக்கம் காட்டுவதாகவும், கூரியர் வேன்களை மட்டுமே தொடர்ந்து சோதனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச்சென்றால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்யும் போது முறையான ஆவணத்தை வழங்க வேண்டும். இது போன்று வழங்காத பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். இதனால் வியாபாரிகள், வீட்டில் விசேஷங்கள் வைத்து உள்ளவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு கூரியர் வேனில் மார்ச் 29 ல் நகை கடைகளுக்கு டெலிவரி செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல ஏப். 2 ல் 16.8 கிலோ தங்கநகைகள், ஏப்ரல் 8 ல் 11. 5 கிலோ தங்க, வெள்ளி நகைகள் முறையான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. ஏப். 6 ல் மதுரையில் இருந்து விருதுநகரில் உள்ள ஏ.டி.எம்., களில் நிரப்புவதற்காக கொண்டுவரப்பட்ட ரூ. 5 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உரிய ஆவணங்கள் இருந்ததால் எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கூரியர் வேன்களை மட்டுமே சோதனை செய்வதாகவும், பிரசாரத்திற்கு தினமும் செல்லும் அரசியல் வாதிகள், வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வெளிப்பகுதியில் இருந்து வருபவர்களின் வாகனங்களை சோதனையிடுவதில் தேர்தல் பறக்கும் படையினர் தயக்கம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது போன்ற செயல்களால் முறையாக நடக்க வேண்டிய வாகன சோதனை ஒரு தலை பட்சமாக செய்யப்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். பிரசாரம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு டோக்கன், நோட்டில் பெயர் எழுதுதல் மூலம் சர்வ சாதாரணமாக பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது.
காலை பிரசாரம், பொதுக்கூட்டம் என்றால் மாலையும், மாலை நிகழ்ச்சி என்றால் மறுநாளும் பணம் விநியோகம் செய்யப்படுகிறது. இதை தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து தடுக்க தவறி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கூரியர் வேனை மட்டுமில்லாமல், அரசியல்வாதிகளின் வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

