/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடர்ந்து தேங்கும் நீர்; மழைக்கு முன் தேவை தீர்வு
/
தொடர்ந்து தேங்கும் நீர்; மழைக்கு முன் தேவை தீர்வு
ADDED : செப் 27, 2025 03:47 AM

விருதுநகர்: விருதுநகர் தினமலர் நகர் நுழைவுப்பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் தொடர்ந்துதேங்கும் மழைநீரால் விபத்து அபாயமும், வாகன ஓட்டிகள், மக்கள் எளிதில் நகர்களுக்குள் சென்று வர முடியாத சூழலும் உள்ளது. மழைக்காலம் விரைவில் துவங்க உள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தீர்வு காண வேண்டும்.
விருதுநகர் தினமலர் நகர், வேலுச்சாமி நகர், கணேசர் நகர் ஆகியவற்றிற்கு செல்ல தினமலர் நுழைவுப்பகுதியை அதிகம் குடியிருப்போர் பயன்படுத்துகின்றனர். காரணம், பஸ் நிறுத்தம் அருகே உள்ளதால் மக்கள் எளிதில் வந்து செல்கின்றனர். இப்படி போக்குவரத்து அதிகம் உள்ள இடத்தில் சர்வீஸ் ரோடும் உள்ளது. மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் திரும்ப வேண்டும் என்றால், இந்த சர்வீஸ் ரோட்டை தான் பயன்படுத்த வேண்டும்.
தற்போது செப். மாதம். இன்னும் ஓரிரு நாட்களில் அக். மாதம் வருகிறது. வடகிழக்கு பருவமழை பெய்யும்.
மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இவ்வாறு பெய்யும் மழைநீர் வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தினமலர் நகர் நுழைவுப்பகுதியும், சர்வீஸ் ரோடும் சந்திக்கும் பகுதியில் இது பெரிய தலைவலியாக உள்ளது. மழைநீர் வடிவதற்கு பல மணி நேரங்கள் ஆகிறது.
இதனால் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள் உள்ளிட்டோர் தடுமாறி தான் வர வேண்டியுள்ளது. மழைநீர் வடிகால் இருந்தும் மழைநீர் அதன்வழியே வெளியேற முடியாத நிலை உள்ளது.
அனைத்து வடிகால் ஓட்டைகளை துார்வாரி மழைநீர் வடிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
அருகில் பெட்ரோல் பங்க் உள்ளது. மின் வயர் ஏதேனும் தேங்கி நிற்கும் நீரில் விழுந்தால் பெரிய அளவில் ஆபத்து அரங்கேறும். நகாய் அதிகாரிகள் இதில் சிரத்தை எடுத்து மழைநீர் தேங்காது, வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.