/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விளை நிலங்களில் மாடுகள் மேய்ப்பு
/
விளை நிலங்களில் மாடுகள் மேய்ப்பு
ADDED : அக் 15, 2025 01:02 AM
திருச்சுழி; திருச்சுழி அருகே கிராமங்களில் விளை நிலங்களில் மாடுகளை மேய்த்து பயிர்களை பாழாக்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
திருச்சுழி அருகே கீழ்க்குடி, பெரிய சோழாண்டி, சின்ன சோழாண்டி, வாகைகுளம், புரசலூர், பூலாங்கால் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம், கரும்பு, உளுந்து, நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப் பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள இந்த கிராமங்களில், அதே மாவட்டத்தை சேர்ந்த வேப்பங்குளம், பம்மனேந்தல், வண்ணாத்தி குளம் உட்பட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை இரவு நேரங்களில் கீழ்க்குடி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அவிழ்த்து விட்டு பயிர்களை பாழாக்குவதாக விவசாயிகள் புகார் கூறினர்.
இதனால் அடிக்கடி 2 மாவட்ட விவசாயிகளுக்கும் பிரச்சனை இருந்து வந்த நிலையில், திருச்சுழி இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையில் கீழ்க்குடியில் கூட்டம் நடந்தது.
இதில் பேசிய விவசாயிகள் மாடுகள் பயிர்களை அழிப்பது தொடர்ந்து வருவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், அக்.16 க்குள் நல்ல முடிவு கிடைக்கவில்லை என்றால் அனைத்து கிராம மக்கள் இணைந்து ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்துவிட்டு ஊரை விட்டு வெளியேறுவோம் என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.