/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயிர் சேதம்: முறையான கணக்கெடுப்பு இல்லை
/
பயிர் சேதம்: முறையான கணக்கெடுப்பு இல்லை
ADDED : மே 22, 2025 11:57 PM

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டத்தில் வாழைப்பயிர் சேதம் குறித்த கணக்கெடுப்பு முறையாக எடுப்பது இல்லை என விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயமாக உள்ளது. இதில், அருப்புக்கோட்டை ,காரியாபட்டி, திருச்சுழி ,நரிக்குடி ,சாத்தூர் உள்ளிட்ட ஒன்றிய கிராமங்களில் வாழை முக்கியமாக பயிரிடப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் அனைத்து மாதங்களிலும் கனமழை, மற்றும் சூறாவளி , மின்னல் உள்ளிட்ட இயற்கை காரணிகளால் வாழை விவசாயம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது. வாழை பலன் தர 10 மாதங்கள் ஆகும். அதற்குள் அதற்கான செலவு ஒரு ஏக்கருக்கு ரூ.70 முதல் 80 ஆயிரம் வரை ஆகிறது.
இயற்கை பாதிப்பினால் விவசாயிகளால் தற்காத்துக் கொள்ள முடியவில்லை பாதிப்பு குறித்து அரசிடம் கேட்கும்போது விவசாயத் துறையில் இருந்து சொற்ப உதவி தான் கிடைக்கிறது. சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் வாழைமரங்கள் காற்றிற்கு சாய்ந்தது. இதனால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: மாவட்டத்தின் பல பகுதிகளில் வாழைமரம் காற்றிற்கு சாய்ந்துள்ளது. விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. வருவாய்த் துறையில் வாழை பயிருக்கு முறையான கணக்கெடுப்பு எடுப்பது இல்லை. கிராம நிர்வாகத்தில் வாழை விவசாயத்தில் அடங்கல் சரியாக பராமரிப்பதும் இல்லை. இதனால் வாழைக்கு மட்டும் அடங்கல் தருவது இல்லை.
அரசு வாழை விவசாயம் குறைவானது என கருதாமல் வாழை பயிரிட்ட விவசாயிகளை முறையாக கணக்கெடுக்க அறிவுறுத்த வேண்டும். இனி வரும் காலத்தில் வாழை விவசாயத்திற்கு இன்சூரன்ஸ் செய்திட உரிய வழிகளை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட முழுவதும் வாழைப்பயிருக்கு இன்சூரன்ஸ் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.