/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயிர்க்கடன் வழங்கும் நிதி அளவை அதிகரிக்க எதிர்பார்ப்பு; அரசுக்கு மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைக்குமா
/
பயிர்க்கடன் வழங்கும் நிதி அளவை அதிகரிக்க எதிர்பார்ப்பு; அரசுக்கு மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைக்குமா
பயிர்க்கடன் வழங்கும் நிதி அளவை அதிகரிக்க எதிர்பார்ப்பு; அரசுக்கு மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைக்குமா
பயிர்க்கடன் வழங்கும் நிதி அளவை அதிகரிக்க எதிர்பார்ப்பு; அரசுக்கு மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைக்குமா
ADDED : ஆக 21, 2025 08:09 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பயிர்க்கடன் நிதி அளவை அதிகரிப்பதும், அது குறித்து அரசுக்கு மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைப்பதும் அவசியமாகி உள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற சிபில் ஸ்கோர் அவசியம் என கூட்டுறவுத்துறை அறிவித்தது. விவசாயிகள் எதிர்ப்புக்கு பின் பழைய நடைமுறைகளில் கடன் வழங்குகிறோம் என்றனர். பழைய முறை படி மற்ற வங்கிகளில் கடன் இல்லை என சான்று வாங்கி வந்து கொடுக்க வேண்டும். 'ஸ்கேல் ஆப் பைனான்ஸ்' எனும் நிதி அளவு அடிப்படையில் கடன் தரப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு 'ஸ்கேல் ஆப் பைனான்ஸ்' எனும் நிதி அளவு விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. நெல் பயிருக்கு டிராக்டர் அறுவடைக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30 முதல் ரூ.35 ஆயிரம் வரை ஆகிறது. ஆனால் வங்கிகளில் பரிந்துரையாக ரூ.25 முதல் 28 ஆயிரம் கொடுக்கின்றனர். இதனால் தான் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளிலும் கடன் பெற்றுக் கொண்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கடன் பெறுகின்றனர்.
தற்போது நிதி அளவு போதாததால் இரு இடங்களிலும் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தால் தான் விவசாயிகள் தப்பிக்க முடியும். இல்லையெனில் கூட்டுறவு வங்கிகளில் பெறும் நிதி அளவு அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
முன்பு இருவேறு வங்கிகளில் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்தால் அதில் தள்ளுபடி அறிவிப்பின் போது அவர்களே சரி பார்த்து கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்து விடுவர். ஆனால் வட்டி மானியம் ஒன்று தான். இப்போது கடன் இல்லை எனும் தடையின்மை சான்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்க வேண்டும் என்ற நிர்பந்தத்தால் ஒருவேளை கல்விக்கடன் வாங்கியிருந்தால் கடன் இல்லை சான்று வழங்குவது தர மறுப்பதுடன், கடனும் தர மறுக்கின்றனர். இதனால் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதும் சாத்தியமாகாத சூழல் உள்ளது.
விவசாயி ராமச்சந்திர ராஜா கூறியதாவது: அதிக ஏக்கரில் விவசாயம் செய்யும் பெரிய விவசாயிகள் கடன் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறு கடன் வாங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை நாட வேண்டியுள்ளது. அவர்களும் தடையின்மை சான்று கேட்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் திக்குமுக்காடி உள்ளனர். இரு வங்கிகளில் கடன் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
ஒன்று நிதி அளவை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் இரு வங்கிகளில் கடன் வாங்க வழிவகை செய்ய வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். விவசாயிகளிடம் கலந்துரையாடி கடிதம் எழுத வேண்டும், என்றார்.