/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கரைகள், மடைகள் சேதம்; கருவேல மரங்களால் பாதிப்பு: கே.நெடுங்குளம் கண்மாய் பாசன விவசாயிகள் கவலை

ADDED : ஜூன் 05, 2025 12:49 AM

காரியாபட்டி: காரியாபட்டி கே.நெடுங்குளம் கண்மாயில் கரைகள், மடைகள் சேதம் அடைந்துள்ளன. சீமைக் கருவேல மரங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காரியாபட்டி கே.நெடுங்குளத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் 80 ஏக்கர் பரப்பளவில், 6 மடைகளுடன் உள்ளது. நீர் ஆதாரமாக தெற்கு ஆற்றில் இருந்து வரத்து கால்வாய் உள்ளது. 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடந்து வந்தது. நாளடைவில் தெற்கு ஆறு பள்ளமானதால் வரத்து கால்வாய் மேடாகி நீர் வரத்து குறைந்தது. அத்துடன் போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது வயல்கள் அனைத்தும் தரிசுகளாக உள்ளன. கண்மாய் துார்வாரி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
நீர் நிரம்பி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கண்மாய் போதிய பராமரிப்பு இல்லாததால் முழுக்க சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. கரைகள், மடைகள் சேதம் அடைந்து, வாய்க்கால்கள் காணாமல் போயுள்ளன.
விவசாயம் செய்ய முடியாமல் பல விவசாயிகள் கட்டட வேலைக்கு சென்று வருகின்றனர். சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, மடைகளை சீரமைத்து, கரைகளை பலப்படுத்தி, வரத்து கால்வாயை துார்வாரி நீர் வரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.