/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான மடைகள்: பள்ளங்களில் தேங்கும் நீர்
/
சேதமான மடைகள்: பள்ளங்களில் தேங்கும் நீர்
ADDED : ஏப் 17, 2025 05:24 AM

காரியாபட்டி: சேதமான மடைகள், மண் எடுத்ததால் மேடாகிய மடைகளால் நீரை தேக்கி விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு வக்கணாங்குண்டு கண்மாய் பாசன விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
காரியாபட்டி வக்கணாங்குண்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் 350 ஏக்கர் பரப்பளவில், 8 மடைகளுடன் உள்ளன. ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறும். நீர் வரத்துக்கு ஆதாரமாக குண்டாற்றிலிருந்து வரத்து கால்வாய் ஏற்படுத்தப்பட்டது. ஒருமுறை கண்மாய் நிறைந்தால் போதும். இரு போகம் நெல் விவசாயம் நடைபெற்றது.
நாளடைவில் மழை பொழிவு குறைந்து ஆற்றில் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு போனதால், மணல்கள் எடுக்கப்பட்டு ஆறு பள்ளமானது. வரத்து கால்வாய் மேடானது. நீர்வரத்து சரிவர இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து கண்மாயில் கிராவல் மண் எடுத்ததால் ஆபத்தான பள்ளங்களாக உள்ளன. மடைகள் மேடாகின. 8 மடைகளும் சேதம் அடைந்து காணப்படுகின்றன. மழை நீர் வீணாக வெளியேறி வருகிறது. தூர்வாரி 20 ஆண்டுகளுக்கு மேலாகின.
அதேபோல் நெல் விவசாயம் நடைபெற்று 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் விவசாயிகள் புலம்பி வருகின்றனர். கண்மாயை தூர்வாரி, மடைகளை, வரத்து கால்வாயை சீரமைத்து மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேடாகிய மடைகள்
அழகுமலை, விவசாயி: ரோட்டுக்காக கிராவல் மண்எடுத்ததால், ஆபத்தான பள்ளங்களாக உள்ளன. மழைநீர் தேங்கினாலும் மடைகள் மேடாக உள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல வழி இல்லை. கண்மாய் தூர்வாரி 20 ஆண்டுகளுக்கு மேலாகின. மேடும், பள்ளமாக இருப்பதால் தண்ணீரை தேக்கி விவசாயம் செய்ய முடியவில்லை. தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணை கட்ட வேண்டும்
வேட்டையன், விவசாயி: ஆறு பள்ளமானது. வரத்து கால்வாய் மேடானது. ஆற்றில் தண்ணீர் வந்தாலும் வரத்து கால்வாயில் ஏற முடியாமல் வீணாக ஆற்றில் செல்கிறது. கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லாமல் முழு கொள்ளளவு எட்டி பல ஆண்டுகள் ஆகின. மீண்டும் விவசாயம் செழிக்க குண்டாற்றின் குறுக்கே அணைகட்டி நீர் வரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மடைகளை சீரமைக்க வேண்டும்
முருகன், விவசாயி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம்நடைபெறும். இரு போகம் விளைந்ததால் எப்போதும்செழிப்பாக இருக்கும். தற்போது மடைகள் சேதமடைந்து தண்ணீர் வீணாவதால் விவசாயம் செய்ய முடியவில்லை. நிலங்கள் தரிசுகளாக உள்ளன. சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மடைகளை சீரமைத்து தண்ணீரை தேக்கினால் மீண்டும் விவசாயம் செழிக்கும்.