/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான ரோடு, மண் நிரம்பிய பாதாளசாக்கடை; அவதியில் விருதுநகர் கம்மாபட்டி தெரு மக்கள்
/
சேதமான ரோடு, மண் நிரம்பிய பாதாளசாக்கடை; அவதியில் விருதுநகர் கம்மாபட்டி தெரு மக்கள்
சேதமான ரோடு, மண் நிரம்பிய பாதாளசாக்கடை; அவதியில் விருதுநகர் கம்மாபட்டி தெரு மக்கள்
சேதமான ரோடு, மண் நிரம்பிய பாதாளசாக்கடை; அவதியில் விருதுநகர் கம்மாபட்டி தெரு மக்கள்
ADDED : அக் 08, 2025 01:09 AM

விருதுநகர்; பேவர் பிளாக் ரோடுகள் சேதம், மண் நிரம்பிய பாதாளச்சாக்கடையின் மேன்ஹோல் வழியாக மழையின் போது கழிவு நீர் வெளியேறுதல், குடிநீர் குழாய் பதித்தும் அனைத்து வீடுகளுக்கு இணைப்பு இல்லை, மூடப்படாத பழைய போர்வெல் உட்பட பல்வேறு பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர் விருதுநகர் கம்மாபட்டி தெரு மக்கள்.
விருதுநகர் நகராட்சியின் 16வது வார்டு கம்மாபட்டி தெருவில் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் அங்காள ஈஸ்வரி, ஸ்டெல்லா, செல்லம், நாகலட்சுமி, பிரியா கூறியதாவது:
கம்மாபட்டியில் 3 பெரிய தெருக்களில் தெரு ஓரங்களில் இருந்த வாறுகால் மூடப்பட்டு 3 அடியில் பாதாளச்சாக்கடை அமைக்கப்பட்டது. இப்பகுதியின் அரசு மருத்துவமனையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு செல்லும் ரோட்டில் பாதாளச்சாக்கடையில் மண் நிரம்பி பல மாதங்களாகியும் இதுவரை நகராட்சி நிர்வாகம் அகற்றவில்லை.
இதனால் மழையின் போது பாதாளச்சாக்கடை நிரம்பி கம்மாபட்டி தெருக்களில் கழிவு நீர் மேன்ஹோல் வழியாக தொடர்ந்து வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில் பாதாளச்சாக்கடையில் இருந்து வெளியே எடுத்த மண்ணை அகற்றாமல் வீடுகளுக்கு அருகே ரோட்டின் ஓரத்தில் கொட்டி வைத்து பல மாதங்களாகிறது.
தெருக்களில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டது. இங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுப்பதற்காக பேவர் பிளாக் கற்கள் ரோட்டின் நடுவே பெயர்த்து எடுத்தனர். ஆனால் குழாய் மட்டுமே பதித்தனர், வீடுகளுக்கு இதுவரை இணைப்பு வழங்காததால் பழைய இணைப்பில் மட்டுமே மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
அதிலும் மழையின் போது பழைய குடிநீர் இணைப்பில் கழிவு நீர் கலந்து வீடுகளுக்கு குடிநீர் வருவதால் மக்கள் பரிதவிக்கின்றனர். இப்படி ரோட்டின் நடுவே கற்களை பெயர்த்து எடுத்ததால் நடந்து, சைக்கிள், டூவீலரில் செல்ல முடியாமல் பலர் இடறி விழுந்து காயமடைகின்றனர்.
தெருவிற்கு ஒரு பொது குடிநீர் டேங்க் இருப்பதால் குடிநீர் இணைப்பு பெறாதவர்கள் விலை கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலையே தொடர்கிறது. வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பையை நகராட்சி ஊழியர்கள் முறையாக சேகரிப்பதில்லை. தெருக்கள் முழுவதும் குப்பை கிடங்காக உள்ளது.
வீடுகளில் கழிவறை வசதி இல்லாதவர்களுக்கு பொது சுகாதார வளாகம் இல்லை. இதனால் பெண்கள், வயதானவர்கள் சிரமப்படுகின்றனர். இது போன்ற சுகாதாரமற்ற சூழலால் கொசு உற்பத்தி அதிகமாகி நோய்பரவல் தொடர்கிறது.
இப்பகுதி நகராட்சி பகுதிக்குள் இருந்தும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. அரசு மருத்துவமனை ரோட்டில் உள்ள பொது குடிநீர் தொட்டியை சுற்றி கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் குடிநீர் பிடிப்பதற்காக காத்திருக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர். இதன் அருகே இருந்த பழைய அடிகுழாய் அகற்றப்பட்டும், போர்வெல் முறையாக மூடப்படாததால் விளையாடும் குழந்தைகள் போர்வெல் உள்ளே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது,என்றனர்.