ADDED : மார் 15, 2026 05:41 AM

சிவகாசி: சிவகாசி ரயில்வே மேம்பாலம் ரவுண்டானா பஸ் ஸ்டாப் அருகே ரோட்டோரத்தில் சேதமடைந்துள்ள டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்களால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி இரட்டை பாலம் விலக்கு ரவுண்டானா பஸ் ஸ்டாப் அருகே ரோட்டோரத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், மாநகராட்சி அலுவலகம், நிறுவனங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் டிரான்ஸ்பார்மரில் இரு மின் கம்பங்களுமே அடி முதல் உச்சி வரை முற்றிலும் சேதம் அடைந்து துருப்பிடித்த கம்பிகளால் தாங்கி நிற்கிறது. பெரிய காற்று அடித்தாலோ மழை பெய்தாலோ விழுந்து விட வாய்ப்பு உள்ளது.. இதனைக் கடந்த தான் மேம்பாலம், கட்டளைபட்டி ரோடு, அரசு மருத்துவமனை பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றது. தவிர மக்கள் சேதமடைந்த டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்கள் அருகில் இருந்துதான் பஸ்கள் ஏறி இறங்குகின்றனர்.
எப்போதுமே போக்குவரத்து நிறைந்திருக்கும் இந்த ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது மின்கம்பங்கள் விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக டிரான்ஸ்பார்மரில் சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
