/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான குடிநீர் தொட்டி, தேங்கும் கழிவுநீர்
/
சேதமான குடிநீர் தொட்டி, தேங்கும் கழிவுநீர்
ADDED : ஆக 12, 2025 06:08 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : செயல்படாத சுகாதாரவளாகம், சேதமான குடிநீர் தொட்டி, தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு உட்பட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இனாம் செட்டிக்குளம் ஊராட்சி மக்கள் தவித்து வரு கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் இனாம் செட்டிகுளம் ஊராட்சி ராஜபாளையத்தில் இருப்பதால் அங்கு நிலவும் அடிப்படை வசதி குறைகள் குறித்து மனுக்கள் கொடுக்கவே மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலையில் வசித்து வருகின்றனர் அப்பகுதி மக்கள். இந்த ஊராட்சியில் இனாம் செட்டிகுளம், ஒத்தப்பட்டி என இருபகுதிகளில் இந்திரா நகர், காமராஜர் நகர், சாய்பாபா தெரு என பல்வேறு தெருக்கள் உள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்ட இந்த ஊராட்சி முழுக்க, முழுக்க ராஜபாளையம் நகராட்சி பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இந்த ஊராட்சி மக்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டும் எனில் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு அலைய வேண்டிய சிரமம் ஆண்டாண்டு காலமாக நீடித்து வருகிறது.
ராஜபாளையத்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ஊராட்சிக்கு டவுன் பஸ், மினி பஸ் வசதியோ இல்லாமல் அப்பகுதி மக்கள் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து பஞ்சு மார்க்கெட் வந்து தான் வெளியூர்களுக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார வளாகம் செயல்படாமல் மூடி கிடப்பதால் திறந்து வெளியைத்தான் மக்கள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இங்குள்ள பழைய மேல்நிலைத் தண்ணீர் தொட்டி பில்லர்கள் சேதமடைந்து இடிந்து விடும் நிலையில் காணப்படுகிறது. அதன் அருகில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்து காணப்படுகிறது. பொது நூலக கட்டடம் பயன்படுத்தப்படாமல் பொருட்கள் வைக்கும் கிட்டங்கியாக உள்ளது. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி சேவை மைய கட்டடம் பயன்படாமல் உள்ளது. முறையான கழிவு நீர் வாறுகால் வசதி இல்லாமல் கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.
ரோட்டில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. ஒரு சில தெருக்களில் ரோடுகள் நன்றாக இருந்தாலும், பல்வேறு தெருக்களில் ரோடுகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இத்தகைய குறைகளை சரி செய்து தர ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.