/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடு
/
ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடு
ADDED : ஏப் 25, 2025 06:07 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் ரோட்டோர கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ,என தாசில்தார் மாரீஸ்வரன் எச்சரிக்கை விடுத்தார்.
காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட், ஒன்றிய அலுவலகம் ரோடு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் ஆக்கிரமித்து கடைகளை வைத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். மாணவியர்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ரோட்டோர கடைகள் நடத்துவோர், சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஏப். 15க்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அனைத்து துறை அலுவலர்களுடன் மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், பஸ் ஸ்டாண்ட், ரோட்டோரம், ஒன்றிய அலுவலகம் ரோடு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முக்கு ரோடு வரையில் ரோட்டோர கடைகள், தள்ளுவண்டிகள், நடமாடும் கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றஅவகாசம் கேட்டால் மே.1 வரை காலக்கெடு வழங்குவது என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில், பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, போலீசார் பணியில் ஈடுபடுவது என்றும், வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என கருதுவோர், உழவர் சந்தை துணை வேளாண் அலுவலரிடம் மனு அளிக்கும் பட்சத்தில் தகுதியான நபர்களுக்கு கடை ஒதுக்கீடு செய்யவும், ரோட்டோரக்கடைகள், தள்ளு வண்டிகள், நடமாடும் வாகன கடைகாரர்கள் தாங்களாக அகற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விளம்பர பதாகை, முன் அறிவிப்பு செய்திட பேரூராட்சி செயல் அலுவலர், நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட வேண்டும். இடையூறு ஏற்படுத்தினால் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என தாசில்தார் மாரீஸ்வரன் எச்சரிக்கை விடுத்தார்.