/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அத்தியாவசிய பணிகளுக்கு பணம் பெறுவதில் தாமதம்
/
அத்தியாவசிய பணிகளுக்கு பணம் பெறுவதில் தாமதம்
ADDED : மே 22, 2025 12:10 AM
அருப்புக்கோட்டை:ஊராட்சிகளில் அத்தியாவசிய பணிகள் செய்து முடித்த பணிகளுக்கு பணம் பெறுவதில் தாமதம் ஆவதால் ஊராட்சி செயலர்கள் திணறி வருகின்றனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள் உள்ளன. ஜன.25 ல், ஊராட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிந்த நிலையில், அந்தந்த ஊராட்சி செயலர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
அனைத்து ஊராட்சிகளுக்கும் சிறப்பு அலுவலராக அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளனர். ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் மின்மோட்டார் பழுது, குழாய்கள் உடைப்பு, தெரு விளக்கு பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் செய்ய வேண்டி வரும். ஊராட்சி செயலர்கள் பணிகளை செய்து அதற்கான பணத்தை பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
செலவுகள் 5 ஆயிரத்திற்கு மேல் இருந்தால், ஓவர்சீயர் மூலம் எம். புக்கில் எழுதி, பின்னர் 2, 3 அதிகாரிகளை கடந்து பில் பாஸ் ஆவதற்குள் பல மாதங்கள் ஆகி விடுகிறது. மேலும், செலவழித்த தொகைக்கான ஜிஎஸ்டி., வரி, டெபாசிட் தொகை உள்ளிட்டவைகள் செலுத்த வேண்டி உள்ளதால், ஊராட்சிகளில் அத்தியாவசிய பணிகள் செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. பணி செய்து முடித்தவுடன் பணம் கொடுக்க வேண்டிய இருப்பதால், இது போன்ற நடைமுறைகளை பின்பற்ற தனியார் வேலை ஆட்கள் தயாராக இல்லை.
பணிகள் செய்ய வேண்டும் என்பதற்காக ஊராட்சி செயலர்கள் ஆட்களை தேடி பிடித்து அத்தியாவசிய பணிகளை செய்ய வேண்டி உள்ளது. பில் தொகை கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஊராட்சிகளில் குடிநீர் பணி கடுமையாக பாதிப்பு அடைந்து உள்ளது.
குழாய் உடைப்புகள், மின் மோட்டார் பழுதுகள் உடனுக்குடன் சரி செய்ய முடியாமல் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் அத்தியாவசிய பணிகளுக்கு உடனடியாக பில் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.