/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அடர்ந்த சீமை கருவேல மரங்கள், காட்டுப்பன்றிகளின் கூடாரம்
/
அடர்ந்த சீமை கருவேல மரங்கள், காட்டுப்பன்றிகளின் கூடாரம்
அடர்ந்த சீமை கருவேல மரங்கள், காட்டுப்பன்றிகளின் கூடாரம்
அடர்ந்த சீமை கருவேல மரங்கள், காட்டுப்பன்றிகளின் கூடாரம்
ADDED : மே 22, 2025 12:10 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி கண்மாய் பராமரிப்பு இன்றி சீமை கருவேலம் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து, காட்டுப்பன்றிகள் வசிக்கும் இடமாகவும் மாறிவிட்டதால் தண்ணீர் வரத்து இன்றி விவசாயம் செய்ய முடியாமல் உள்ளது.
அருப்புக்கோட்டை - விருதுநகர் ரோட்டில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் 120 ஏக்கர் பரப்பளவில் பெரிய புளியம்பட்டி கண்மாய் உள்ளது. விவசாயிகள் நலன் கருதி 2010 ல், கண்மாய் உருவாக்கப்பட்டது. கண்மாய்க்கு மூப்பர் ஊருணி, காட்டு ஊருணி மற்றும் அந்தப் பகுதியிலுள்ள காட்டு ஓடைகளிலிருந்து மழைநீர் வந்து சேரும். கண்மாய் நிறைந்த உடன் உபரி நீர் அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் சேரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கண்மாயை சுற்றியுள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது. விவசாயிகள் மக்காச்சோளம் ,சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை விளைவித்தனர். அந்தப் பகுதியில் உள்ள ஒரு சில விவசாய தோட்ட கிணறுகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்தது.
நாளடைவில் கண்மாய் பராமரிப்பு செய்யாமல் விடப்பட்டது. இதனால் கண்மாய் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து விட்டது. மரங்கள் அடர்த்தியாக இருப்பதால் காட்டுப்பன்றிகள் மான்கள் வசிக்கும் இடமாக மாறிவிட்டது. கண்மாய் அருகில் விவசாய நிலங்களில் விளைந்துள்ள மக்காச்சோளம், சோளம் பயிர்களை காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் புகுந்து பயிர்களை பாழாக்கி விடுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் பயிர்கள் பாழாகின்றன. இதனால் விவசாயம் செய்வதற்கு அந்த பகுதி விவசாயிகள் தயங்குகின்றனர்.
கண்மாயிலும் தண்ணீர் இல்லாததால் விவசாயம் கேள்விக்குறியாக மாறிவிட்டது. இந்த பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக கண்மாயை பராமரிக்கவும் பன்றிகளை ஒழிக்கவும் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. பராமரிப்பில்லாத கண்மாயில் கரைகள் துார்ந்தும், மண்மேவியும் உள்ளது. முறையாக பராமரிப்பு இல்லாவிட்டால் பெரிய புளியம்பட்டி கண்மாய் காணாமல் போய்விடும்.
பராமரிப்பு அவசியம்
ஜனார்த்தனன், விவசாயி: பெரிய புளியம்பட்டி கண்மாயில் பராமரிப்பு பணி செய்ய வேண்டும். கண்மாயை சுற்றி எனக்கு சொந்தமான ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். கண்மாயில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியவில்லை. கண்மாயில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றியும், கரைகளை உயர்த்தி பலப்படுத்த வேண்டும்.
பயன் இல்லை
தசரதன், விவசாயி: பெரிய புளியம்பட்டி கண் மாயை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். மழைக்காலத்தில் கூட போதுமான அளவில் தண்ணீர் நிறைவது இல்லை. கண்மாய்க்கு தண்ணீர் வரும் ஓடைகள் பராமரிப்பு இன்றி அடைபட்டு போய் உள்ளது. கண்மாய் இருந்தும் தண்ணீர் இல்லாமல் நாங்கள் மானாவாரி விவசாயம் தான் செய்து வருகிறோம். அரசு கண்மாயை துார் வாறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பன்றிகளின் புகலிடம்
அழகர்சாமி, விவசாயி: பெரிய புளியம்பட்டி கண்மாய் பராமரிப்பின்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இதனால், காட்டுப்பன்றிகள் வசிக்கும் இடமாக மாறிவிட்டது. கண்மாய்க்கு அருகில் உள்ள நிலங்களில் புகுந்து பயிர்களை பாழாக்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் பன்றிகள், மான்களால் விவசாயிகள் பெரிய நஷ்டத்தை சம்பாதித்து வருகின்றனர். பன்றிகளை விரட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.