மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் பேட்ச் ஒர்க் பார்த்தும் மறுபடியும் சேதம்
மதுரை-துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் பேட்ச் ஒர்க் பார்த்தும் மறுபடியும் சேதம்
ADDED : மே 17, 2026 03:55 AM

காரியாபட்டி: மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை கல்குறிச்சி அருகே சேதம் அடைந்த ரோட்டை பேட்ச் ஒர்க் பார்த்தும், மறுபடியும் அதே இடங்களில் சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை படுமோசமாக இருந்தது. 2 மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை 4 மணி நேரமானது. கனரக வாகனங்கள் அடிக்கடி பழுதானது. இதையடுத்து ரோடு புதுப்பிக்கும் பணி நடைபெற்று, முடிவடைந்தது. வாகனங்கள் எளிதில் சென்று வர முடிந்தது.
இந்நிலையில் தரம் இல்லாமல் ரோடு போடப் பட்டதால் ஒரு சில மாதங்களிலே ஆங்காங்கே ரோடு பெயர்ந்து குண்டும் குழியுமானது. குறிப்பாக கல்குறிச்சி, காரியாபட்டி அருகே ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டன. வாகனங்கள் சென்றுவர சிரமம் ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதற்குப் பின் சேதமான இடங்களில், பெயர்ந்த தார் கலவையை அப்புறப்படுத்தி பேட்ச் ஒர்க் பார்க்கப்பட்டது. ஓரளவுக்கு வாகனங்கள் தங்கு தடை இன்றி சென்றுவர முடிந்தது.
சில நாட்களிலே பேட்ச் ஒர்க் பார்த்த அதே இடங்களில் மறுபடியும் தார் கலவை பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி வருகிறது. அதிவேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து செல்வதால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இரவு நேரங்களில் டூ வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் விபத்து அச்சத்தில் செல்கின்றனர்.
அருகில் வந்தவுடன் பிரேக் பிடிப்பதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். மறுபடியும் சேதமான இடங்களில் உள்ள தார் கலவைகளை அப்புறப்படுத்தி, தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
