/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ.455 கோடியில் அர்ஜூனா நதியை துார்வார அறிக்கை தயாரித்தும் பலனில்லை : 4 அணைகள், 169 கண்மாய்களுக்கு நீர் வரத்து பாதிப்பு
/
ரூ.455 கோடியில் அர்ஜூனா நதியை துார்வார அறிக்கை தயாரித்தும் பலனில்லை : 4 அணைகள், 169 கண்மாய்களுக்கு நீர் வரத்து பாதிப்பு
ரூ.455 கோடியில் அர்ஜூனா நதியை துார்வார அறிக்கை தயாரித்தும் பலனில்லை : 4 அணைகள், 169 கண்மாய்களுக்கு நீர் வரத்து பாதிப்பு
ரூ.455 கோடியில் அர்ஜூனா நதியை துார்வார அறிக்கை தயாரித்தும் பலனில்லை : 4 அணைகள், 169 கண்மாய்களுக்கு நீர் வரத்து பாதிப்பு
ADDED : பிப் 28, 2025 07:22 AM
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வத்திராயிருப்பு அர்ஜுனாபுரம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உற்பத்தியாகும் அர்ஜுனா நிதி மலைப்பகுதியில் 195 சதுர கிலோ மீட்டரும், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, சாத்துார், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டம் பேரையூர் என 6 தாலுகாக்களில் 900 சதுர கிலோமீட்டர் வடிகால்களை கொண்டுள்ளது. வைப்பாறு நதியின் 13 கிளை ஆறுகளில் அர்ஜுனா நதி முக்கியமானது. மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்களின் ஒருவரான அர்ஜுனனால் இந்த நதி உருவாக்கப்பட்டது என புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனா நதியில் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு, ஆனைக்குட்டம், கொல்வார்பட்டி ஆகிய நான்கு அணைகள் உள்ளது. மேலும் சிறிய , பெரிய அளவிலான 169 கண்மாய் , குளங்கள் பாசன வசதி பெறுகிறது.
ஒட்டு மொத்தமாக அர்ஜுனா நதி மூலம் மதுரை ,விருதுநகர் மாவட்டத்தில் 12,950 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 11,186 ஹெக்டேர் நிலங்களில் 5,627 ஹெக்டேர் விவசாய நிலங்களில் மட்டுமே பயிர் சாகுபடி நடைபெறுகிறது. 50 சதவீதம் விவசாய நிலங்கள் சாகுபடி நடைபெறாமல் தரிசு நிலங்களாக உள்ளன. இந்நிலையில் அர்ஜுனா நதி பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால் மண் மேவி, ஆக்கிரமிப்பு காரணமாக குறுகியுள்ளது. அதிலும் சீமைக்கருவேல மரங்கள், அதிகமான கோரைப்புற்கள் வளர்ந்து நீரோட்டம் தடைபடுவதால் நீர் பாசனம் தடைபடுகிறது.
தவிர பல கிராமங்கள் வழியாக வரும் இந்த நதியில் அதிக அளவிலான குப்பையும் கொட்டப்படுகின்றது. அர்ஜுனா நதி , அதன் கிளை ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றை முழுமையாக சீரமைத்து துார்வார தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல், நீர்நிலைகள் மறுசீரமைப்பு ,மேலாண்மை அமைப்பு சார்பில் 2007 -- 2008 நிதியாண்டில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.455 கோடியில் அர்ஜுனா நதி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. அத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாததால் அர்ஜுனா நதியை ஆதாரமாக கொண்ட ஆனைக்குட்டம் அணை ,பல்வேறு கண்மாய்களுக்கு நீர்வரத்து இன்றி விவசாய சாகுபடி பரப்பு படிப்படியாக குறைந்து விட்டது.
இதனால் பெரும்பான்மையான விவசாயிகள் அர்ஜுனா நதியை ஆதாரமாகக் கொண்டு விவசாயம் செய்வதையே விட்டு விட்டனர். இதே நிலை நீடித்தால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் அர்ஜுனா நதி மூலமாக தண்ணீர் கிடைக்கும் அணைகளும் வறண்டு விடுவதால் பல நகரங்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படுகின்றது. எனவே அர்ஜுனா நதியை முழுமையாக துார்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.