/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பா.ஜ., கூட்டணியில் மீண்டும் சேர தினகரன் நிபந்தனை
/
பா.ஜ., கூட்டணியில் மீண்டும் சேர தினகரன் நிபந்தனை
ADDED : செப் 10, 2025 03:33 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:''எங்களுக்கு துரோகம் செய்தவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள முடியாது. அவரை தவிர அ.தி.மு.க.,வில் வேறு யாரை நிறுத்தினாலும் ஏற்றுக்கொண்டு மீண்டும் பா.ஜ., கூட்டணியில் இணையத் தயார் ''என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்த தினகரன் கூறியதாவது:
துணை ஜனாதிபதியாக ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று இருப்பது தமிழகத்திற்கு பெருமையும்,
மகிழ்ச்சியும் சேர்க்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன். நான் பா.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறும் போது எல்லா காரணங்களையும் சொல்லிவிட்டேன். தனிப்பட்ட முறையில் அவருக்கும், எனக்கும் மன வருத்தமும் கிடையாது, கோபமும் கிடையாது. எனது அலைபேசி எண் அவரிடம் உள்ளது.
செங்கோட்டையனின் நல்ல முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பது ஜெ., தொண்டர்கள் அனைவரின் விருப்பம்.
அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும் மீண்டும் பா.ஜ., கூட்டணிக்கு வர அழைப்பு கொடுப்பது நல்ல எண்ணம் தான்.
ஆனால் எந்த துரோகத்தை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தோன்றியதோ அதனை ஏற்றுக் கொண்டு நாங்கள் செல்வதற்கு வாய்ப்பில்லை. எனக்கு அங்கு உள்ளவர்களில் ஒரே ஒரு நபரை, அவரைச் சேர்ந்த ஒரு சிலரை தவிர யார் மீதும் கோபம் கிடையாது.
அ.தி.மு.க., சார்பாக நாங்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடியவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் எங்களுக்கு மீண்டும் கூட்டணியில் இணைவதில் பிரச்சனை இல்லை. மாறாக எங்களுக்கு துரோகம் செய்வதரை எப்படி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியும். தொண்டர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள்.
நாங்கள் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை.நான்கரை ஆண்டு கால முதல்வராக இருந்தபோது வட தமிழக மக்களை ஏமாற்றி தென் தமிழக மக்களுக்கு பெரிய துரோகம் விளைவித்தார் பழனிசாமி.
அவரைப் பதவியில் அமர்த்தியவர்களுக்கு துரோகம் என பட்டியல் நீள்கிறது.
பழனிசாமி செயல்பாட்டால் அ.தி.மு.க., செல்வாக்கு படு பாதாளத்திற்கு சென்று விட்டதால் மக்களைப் பிரித்தாள வேண்டும் என அவர் செயல்படுகிறார். ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி தொடங்க, தேர்தலில் நிற்கவோ, முதல்வர் எனக் கூறவோ யாருக்கும் உரிமை இருக்கிறது. யாரையும் குறைத்து பேச கூடாது. மக்கள்தான் இறுதி எஜமானர்கள் என்றார்.
தாமரை மலர் மாலை சமர்ப்பித்து பிரார்த்தனை ஆண்டாள் கோயிலில் ரெங்கமன்னாருக்கு வெண்பட்டும், ஆண்டாளுக்கு பச்சைப்பட்டும் தாமரை மலர் மாலையும் சமர்பித்தும் தினகரன் தரிசனம் செய்தார். பின்னர் மணவாள மாமுனிகள் சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு சடகோப ராமானுஜ ஜீயருடன் தனி அறையில் 10 நிமிடம் ஆலோசனை செய்து ஆசி பெற்றார்.