/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளங்களான ரயில்வே கேட் ரோடுகள்: வாகன ஓட்டிகள் கடந்து செல்வதில் சிரமம்
/
பள்ளங்களான ரயில்வே கேட் ரோடுகள்: வாகன ஓட்டிகள் கடந்து செல்வதில் சிரமம்
பள்ளங்களான ரயில்வே கேட் ரோடுகள்: வாகன ஓட்டிகள் கடந்து செல்வதில் சிரமம்
பள்ளங்களான ரயில்வே கேட் ரோடுகள்: வாகன ஓட்டிகள் கடந்து செல்வதில் சிரமம்
ADDED : நவ 21, 2024 04:09 AM

மாவட்டத்தில் நகர், புறநகர், ஊரகப்பகுதிகள் வழியாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே தண்டவாளங்களை கடந்து விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, நரிக்குடி உள்பட பல பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.
இந்த தண்டவாளங்களை கடந்து செல்வதற்காக ரயில்வே கேட் அமைக்கப்பட்ட பகுதிகளில் ரயில்வே துறை மூலம் இருபுறமும் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதன் எல்லை முடியும் பகுதியில் இருந்து மாநில நெடுஞ்சாலைத்துறையினர் தார் ரோடு அமைத்து பராமரித்து வருகின்றனர்.
கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து இருப்பதால் ரயில்வே கேட் ரோடுகளை அடிக்கடி பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரோட்டில் சேதம் ஏற்பட்டால் உடனடியாக 'பேச் ஒர்க்' செய்யப்படுகிறது. ஆனால் ரயில்வே கேட் ரோடு சேதமானால் உடனடியாக பேச் ஒர்க் செய்யப்படுவதில்லை.
இதனால் ரயில்வே கேட் அமைந்துள்ள ரோடுகள் பெரும்பாலான இடங்களில் சேதமான நிலையில் இருப்பதால் டூவீலர், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தை கடந்து செல்ல முடியாமல் திண்டாடுகின்றன. மேலும் ஸ்ரீவில்லிப்புத்துார் அத்திக்குளம் ரயில்வே கேட் அமைத்து பல ஆண்டுகளாகிறது. தற்போதைய வாகன பெருக்கத்திற்கு ஏற்றாற் போல மாற்றி அமைக்கப்படாமல் குறுகலானதாக உள்ளது.
ரயில்வே கேட் ரோடு பள்ளங்களில் இரவில் வாகன ஓட்டிகள் விழுந்து காயமடையும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இவ்வழியாக செல்லும் போது வாகனங்களின் உதிரிபாகங்கள் கழன்று விழுந்து சேதமாகி வருகிறது.
மருத்துவ அவசரத்திற்காக குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் அழைத்து செல்லும் வாகனங்கள் ரயில்வே கேட் கடப்பதற்குள் அவதிக்குள்ளாகும் நிலையே தொடர்கிறது. எனவே மாவட்டத்தில் சேதமான நிலையில் உள்ள ரயில்வே கேட் ரோடுகளை சீரமைத்து வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.