ADDED : அக் 28, 2025 03:26 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே கமுதிவிலக்கு அருகில் உள்ள குடியிருப்போருக்கு மயான வசதி இல்லாததால் சொந்த ஊர்களுக்கு இறந்தவர்களை கொண்டு செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தும்முசின்னம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது கமுதி விலக்கு சந்திப்பு. இந்தப் பகுதியில் உள்ள புறநகர் பகுதியில் பல சமுதாயத்தினர் 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர். இங்கு புது மயானம் கட்டப்படவில்லை. இதனால், இறந்தவர்களை புதைக்க , எரிக்க மயானம் இல்லாததால் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு கொண்டு சென்று அங்கு இறுதிச்சடங்கு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். பல ஆண்டுகளாக மயான வசதி கேட்டு போராடியும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இந்த புறநகர் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு திருச்சூழி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கமுதி விலக்கு பகுதியில் ஒரு பொது மயானம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

