ADDED : ஜூன் 08, 2025 11:15 PM

சிவகாசி: சிவகாசி - திருத்தங்கல் ரோட்டில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு விலக்கிலிருந்து திருத்தங்கல் செல்லும் ரோட்டில் கழிவுநீர், மழை நீர் வெளியேறுவதற்காக வாறுகால் உள்ளது. ஆனால் இந்த வாறுகால் மண் மேவி முழுமையாக அடைபட்டுள்ளது. இதனால் கழிவு நீர் வெளியேற வழி இன்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் ஏற்படுகிறது. தவிர மழைக்காலங்களில் மழைநீர் கழிவு நீர் வெளியேறி ரோட்டில் ஓடுகிறது.
அது சமயத்தில் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். நகருக்குள் நுழைகின்ற அனைத்து வாகனங்களும் இதை கடந்து தான் வர வேண்டும். எனவே இப்பகுதியில் வாறுகாலை துார்வாரி கழிவுநீர் வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.