ஊராட்சி செயலர்களை அலுவலகங்களில் சந்திப்பதில் சிரமம் : அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் சிக்கல்
ஊராட்சி செயலர்களை அலுவலகங்களில் சந்திப்பதில் சிரமம் : அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் சிக்கல்
ADDED : மே 31, 2026 01:43 AM

ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் குடிநீர், சுகாதாரம், தெரு விளக்கு, ரோடு உட்பட பல்வேறு அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்து ஊராட்சி அலுவலகங்களில் செயலர்களை நேரில் சந்திக்க முடியமல் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இதனால் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு வசதியாக தினமும் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஊராட்சி அலுவலகங்களில் செயலர்கள் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள், 1 மாநகராட்சி, 5 நகராட்சி, 9 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 450 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தற்போது மக்கள் பிரதிநிதிகளாக கவுன்சிலர்கள், சேர்மன்கள் உள்ளனர். ஆனால் ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்து தற்போது ஊராட்சி செயலர்கள் நிர்வாக பொறுப்பு வகித்து வருகின்றனர்.
இதில் நகராட்சி கமிஷனர்கள் கூட தற்போது தினமும் காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை பஜார் வீதிகள், பஸ் ஸ்டாண்ட் மட்டுமின்றி ஒரு வார்டிற்கு நேரில் சென்று அப்பகுதியில் நிலவும் அடிப்படை குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்து அதனை ஜி.பி.ஆர்.எஸ். மூலம் போட்டோ எடுத்து தங்களது மண்டல அலுவலர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
ஆனால் இந்த நடைமுறை ஊராட்சி ஒன்றியங்களில், கிராம ஊராட்சிகளில் கடைபிடிப்பதில்லை. பெரும்பாலான வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் தினமும் அலுவலகத்திற்கு வருவதற்கு காலை 10:30 மணிக்கு மேல் ஆகிவிடும். அதிலும் கலெக்டர் அலுவலக மீட்டிங் என்றால் அவர்கள் அலுவலகத்திற்கு எப்போது வருவார்கள் என்பது அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கூட தெரியாது.
இதனால் இவர்கள் கிராம ஊராட்சிகளை நேரில் சென்று ஆய்வு செய்வது என்பது மிகவும் குறைந்த அளவில்தான் நடக்கிறது. அதே நேரம் பெரும்பாலான ஊராட்சி செயலர்கள் தங்களது பணியிட கிராமங்களில் தங்காமல் நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இதனால் இவர்கள் தினமும் சரிவர அலுவலகங்களுக்கு சென்று வருகிறார்களா, எப்போது அலுவலகத்தில் இருப்பார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை.
அலைபேசியில் தொடர்பு கொண்டாலும் பெரும்பாலான ஊராட்சி செயலர்கள் மக்களிடம் கோபப்படுகின்றனர். சில ஊராட்சி செயலர்கள் ரியல் எஸ்டேட், நில புரோக்கர், ஏஜென்சி போன்ற சைடு பிசினஸ் செய்வதால், அதில் தான் கவனம் செலுத்துகின்றனர். இதனால் குடிநீர் சப்ளை பாதிப்பு, சுகாதாரக் கேடு, சேதமடைந்த ரோடு, தீர்வை பணம் செலுத்த தவிப்பு உட்பட பல்வேறு பிரச்னைகளை தினமும் கிராம மக்கள் சந்தித்து வருகின்றனர்.
எனவே, ஊராட்சி செயலர்கள் தினமும் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தங்கள் அலுவலகத்தில் இருப்பதையும், நகராட்சி நிர்வாகம் போல் தினமும் ஒரு வார்டிற்கு நேரில் சென்று பார்வையிடவும், சமுதாயக்கூடம், பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், மருத்துவமனைகள், பயணியர் நிழற்குடைகள் பகுதிகளில் தினமும் தூய்மை பணி நடப்பதை அலைபேசியில் ஜி.பி.ஆர்.எஸ். போட்டோ எடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், கலெக்டருக்கும் அனுப்புவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டுமென ஊராட்சி மக்கள் எதிர்பார்க் கின்றனர்.
